‘ஜால்ரா அடிக்கத் தெரியாது’.. – ஜெயரஞ்சன் துணிச்சல் பேட்டி

612

பொருளாதார நிபுணர் என்கிற அடையாளத்துடன் செய்தித் தொலைக்காட்சி விவாதங்களின் வாயிலாக பரவலாக அறியப்பட்டவர் ஜெ.ஜெயரஞ்சன். விவாதங்களில் இவர் எடுத்துரைக்கும் வாதங்களின் எளிமையும், ஆழமும், அவற்றின் பின்னிருக்கும் தார்மீகக் கோபமும் சோஷியல் மீடியாவில் ஏக பிரபலம். யார் இந்த ஜெயரஞ்சன்? பின்னணி என்ன? அவரிடமே கேட்டுவிட்டோம்…

நான் பிறந்தது தஞ்சை மாவட்டத்தில். என் தந்தை அரசுப்பணியில் இருந்ததால், பணி மாறுதலாகிக் கொண்டே இருப்பார். அதனால் எந்த ஊரிலும் நிலையாக இருந்ததில்லை. பள்ளிக்கூடங்கள் மாறிக்கொண்டே இருப்பேன். இளங்கலைப் படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயின்றேன். கணிதவியல் பொருளாதாரத்தில் முதுகலை முடித்துவிட்டு, சென்னை எம்.ஐ.டி.எஸ். ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். அதன்பின் புதுச்சேரியில் உதவிப் பேராசிரியராக சிலகாலம் பணிபுரிந்துவிட்டு, சென்னையில் மாற்று வளர்ச்சி மையம் என்கிற ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினேன். தற்போதுவரை அதன் இயக்குநராக இருந்து வருகிறேன்.

விவாதங்களில் நீங்கள் வைக்கும் வாதங்களில் திராவிடம் மற்றும் இடதுசாரி சாயல் தெரிகிறதே?

நான் திராவிடமோ, இடதுசாரியோ வலதுசாரியோ உள்பட எந்த சிந்தனையாளரும் கிடையாது. நான் பொருளாதாரம் பயின்றவன். பொருளாதாரத் துறையில் ஆய்வு செய்தவன்; அதனடிப்படையில் அணுகி என் பார்வையில் வாதங்களை முன்வைக்கிறேன். எது சரி, எது தவறு என்பதை மக்களே முடிவு செய்து கொள்வார்கள். அவ்வளவுதான்.

நான் மற்றவர்களைப் போன்று புள்ளிவிபரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பொருளாதாரம் பற்றி பேசுவதில்லை. என்னுடைய பொருளாதாரம் தொடர்பான எழுத்துக்கள் மற்றும் கருத்துக்களில் வரலாறு சமூகவியல், மானுடவியல் கலந்திருக்கும். அதனால் பார்ப்பதற்கு திராவிடம் அல்லது இடதுசாரி சாயல் தெரியும்.

மேலும் நான் எல்லா விவாதங்களிலும் கலந்து கொள்வதில்லை. பத்து அழைப்புகளில் இரண்டு அல்லது மூன்று அழைப்புகளை மட்டுமே ஏற்றுக் கொள்வேன். தலைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டுதான் சம்மதிப்பேன். அதுவும் ஊடக நண்பர்களின் கட்டாய அழைப்பின்பேரிலே.

டிவி விவாதங்களில் பொருளாதார நிபுணர் என்கிற அடையாளங்களோடு பலர் அமர்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பொருளாதாரம் என்பது மிகப்பெரிய சப்ஜெக்ட். அதில் பல கூறுகள் உள்ளன; எல்லா மட்டங்களிலும் பொருளாதார நடவடிக்கைகள் இருக்கின்றன. உதராணமாக தற்போது நோய்த் தொற்று பரவலின் தாக்கத்தில் கூட ஒரு பொருளாதாரம் உள்ளது. அதனால் இவர் தான் நிபுணர் அவர்தான் நிபுணர் என்பதெல்லாம் கிடையாது. ஒருவர் நிதி ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார். ஒருவர் பட்டயக் கணக்காளாராக இருப்பார்; ஒருவர் பேராசிரியாராக இருப்பார். ஆனால் அவர்கள் பொருளாதார நிபுணராக உட்கார்ந்திருப்பார்கள். ஒரு துறையில் நிபுணர் என்று தனியே யாரும் கிடையாது. அந்தந்த துறையில் அனுபவம் உடைய அனைவருமே நிபுணர்கள் தான்.

உலகப் பொருளாதாரத்தை புரட்டி போட்டு வருகிறது கொரோனா. இது எங்கே போய் முடியும்?

எங்கே போய் முடியும் என்பது இப்போது தெரியாது. ஒரு பெரிய அலை வருகிறது. அது எந்தளவுக்கு வாரி சுருட்டிக்கொண்டு போகும் என்பது அது ஓய்ந்த பின்புதான் தெரியும். இதுதான் இப்போதுள்ள நிலை. ஆனால் உலகப் பொருளாதாரம் இன்னமும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது மட்டும் உறுதி. மனிதகுலம் தோன்றி பொருளாதாரத்திலும் சமூகத்திலும் வளர்ந்த பின்பு, இதுபோன்ற ஒரு பொருளாதார சிக்கலை கண்டதில்லை.

இந்தியப் பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது?

கொரோனா உருவாகுவதற்கு முன்னரே இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில்தான் இருந்தது. இப்போது அதைவிட படுமோசமான நிலையில் இருக்கிறது. கொரோனா பாதிப்பால் பட்ஜெட்டில் சொல்லப்பட்ட அறிவிப்புகள், கணக்குவழக்குகள் எதுவுமே செல்லுபடியாகது. இங்கே மட்டுமல்ல. உலகம் முழுவதும் இதே கதிதான். அதனால், பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டீர்களே, அது என்னவாயிற்று? பொருளாதார வளர்ச்சிநிலை எப்படியிருக்கிறது? என்று ஒப்பிட்டு பேசுவதற்கு தகுந்த நேரம் இதுவல்ல. அந்த சூழ்நிலை வேறு. இப்போதிருக்கும் சூழ்நிலை வேறு. இது மக்களின் உயிர்போகும் காலம். இப்போதைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டியது, கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவது எப்படி என்பதை பற்றியதாகவே இருக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பால் எந்தெந்த துறையினர் அதிகம் பாதிக்கப்படுவர்?

சிறு, குறு, நடுத்தர, பெரிய என எல்லாத் தொழில் துறையினருக்குமே இது பெருத்த அடி. தள்ளுவண்டி வைத்திருப்பவரில் இருந்து விமானம் உற்பத்தி செய்பவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்பட்டு உள்ளார்கள். உதராணமாக கீரை பயிரிட்டவர் அதை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதேபோல் விமான நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் இருக்கின்றன. இதுதான் இன்றைய நிலை

கொரோனா தாக்கத்தையொட்டி கேரளா அரசு எடுத்துவரும் பொருளாதார நடவடிக்கைகளை ஒரு இந்திய மாடலாக விரிவுபடுத்த முடியுமா?

கேரளா பெரிய அளவில் நிதி நெருக்கடியில் இருக்கக்கூடிய மாநிலம். மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதியே அவர்களுக்கு வரவில்லை. இந்த நிதி நெருக்கடியிலும் இவ்வளவு வேலைகளை பார்த்துள்ளார்கள் என்பது பாராட்ட வேண்டிய விஷயம். ஒரு மாநில அரசுக்கு இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் மத்திய அரசுக்கு கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியை அவசரக் காலங்களில் எடுத்து பயன்படுத்துவதுதான் சரியான முறை. ஆனால் மத்திய அரசானது சென்ற ஆண்டே ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை எடுத்து செலவழித்து விட்டது. இப்போது கொரோனாவை எதிர்கொள்வதற்கு மாநில அரசாங்ககளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
.
டிவி விவாதங்களில் மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக காத்திரமான வாதங்களை முன்வைப்பதால் உங்களை பாஜக எதிர்ப்பாளர் என்கிறார்களே ஒருசாரர்..

நான் பல ஆண்டுகளாகவே விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறேன். சமீபகாலமாகத்தான் இவை யூடியூப் போன்ற தளங்களில் பகிரப்படுவதால், என்னை பாஜக எதிர்ப்பாளாராக பலரும் பார்க்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியின்போதும் அப்போதைய பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இதே ‘புதிய தலைமுறை’ டிவியில் தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் அழகிரியும் நானும் கலந்துகொண்ட ஒரு விவாத நிகழ்ச்சியில் கல்வி தனியார்மயமாக்கலை குறித்து காத்திரமான விமர்சனங்களை முன்வைத்தபோது, ‘’உங்கள் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்’’ என என்னைப்பார்த்து ஆவேசமாக கேட்டார் அழகிரி.

நான் ஒரு நிபுணர். குறைகளை சுட்டிக்காட்டுவதும், விமர்சனம் பண்ணுவதுதான் எனது வேலை. யாருக்கும் ஜால்ரா அடிக்க எனக்குத் தெரியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here