‘நான் சுதந்திரப் பறவை’ – நடாஷா சிங் கலகல பேட்டி

360
‘நான் சுதந்திரப் பறவை’ – நடாஷா சிங் கலகல பேட்டி

‘ஆப்பிள் ஹீரோயின்’ என ரசிகர்கள் வர்ணித்து தள்ளுகின்றனர் ‘ஜிப்ஸி’ நாயகியான நடாஷா சிங்கை. ஆப்பிளோடு ஒப்பிடுவதற்கு காரணம் அவர் ஹிமாச்சல் வரவு என்பதால்தானாம். முதல் படமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் உற்சாகத்தில் திளைக்கிறார் நடாஷா சிங். ஜிப்ஸி’ பட அனுபவம் எப்படி? அவரே சொல்கிறார்..

மிஸ் இந்தியா, மிஸ் ஹிமாச்சல் பிரதேஷ்’ன்னு பட்டத்த வாங்கிட்டு, எப்படி தமிழில் நடிக்க வந்தீங்க?

முதலில் எனக்கு மிஸ் யுனிவர்ஸ் போன்ற மாடலாக வேண்டும்ன்னு தான் ஆசை இருந்தது. ஆனால் மிஸ் இந்தியா ஆனபிறகு, நீங்க வெறும் மிஸ் இந்தியா தான். அதன்பிறகு வேறு ஒன்றும் இல்லை. அதனால் ஹிந்தி சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். மிஸ் இந்தியா ஆனபிறகு மும்பை போயிட்டேன். அப்போ மும்பையில தமிழ் படத்திற்கான ஆடிஷன் நடப்பதாக கேள்விப்பட்டு அங்க போனேன். அப்புறம்தான் எனக்கு அது ராஜுமுருகன் சாரின் படம்ன்னு தெரிஞ்சுது.

ஏற்கனவே அவர் இயக்கிய ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்கள பார்த்திருக்கேன். கமர்ஷியல் சினிமாவை விட எனக்கு யதார்த்தமான ஆர்ட் சினிமா ரொம்ப பிடிக்கும். ஆடிஷனில் தேர்வாகி இப்போ முன்னாடி நடிகையாக நிற்கிறேன்.

ஜீவாவோடு நடித்த அனுபவம்?

அவரோடு நடிப்பது உண்மையில் நல்ல ஒரு ஜாலியான அனுபவம். எனக்கு பல விஷயங்களில் உதவி செய்தார். ‘ஜிப்ஸி’ டீம்லேயே நான் மட்டும்தான் பெண். சூட்டிங்கிற்காக காஷ்மீர் முதல் கேரளா என பல மாநிலங்களுக்கு பயணம் செய்தோம். எனக்கு ஹிமாச்சல பிரதேசம் என்பதால் க்ளைமேட் பெரிய பிரச்சனையாக இருந்தது. ராஜஸ்தான் போனபோது எனக்கு ரொம்ப கடினமாக இருந்தது. அங்கு பாலைவனத்தில் ஷூட்டிங் நடத்தினோம். அங்கு வெக்கை வேறு அதிகமாக இருந்தது. எனக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் ஜீவாவோ, எப்போதும் கூலாக இருந்தார்.

அவர் உண்மையான ஜிப்ஸியாக மாறிட்டார். இங்குள்ள கலாச்சாரத்தை ரசிங்க, உணவை ரசிங்க இப்படி சொல்லிட்டே அவர் அமைதியாகவும் கூலாகவும் இருந்தார். அவருக்கு பல படங்களில் நடித்துள்ள அனுபவமும் சிறந்த நடிகராகவும் இருப்பதால் பல காட்சிகளில் எனக்கு உதவி செய்தார்.

வேறு ஏதாவது தமிழ் படம் பார்த்துள்ளீர்களா?

‘நண்பன்’ படம் பார்த்திருக்கேன். தமிழ்ல நடிக்க வர்றதுக்கு முன்னாடியே ‘கூக்கு’, ‘ஜோக்கர்’ படங்களை பார்த்திருக்கேன். வழக்கமா அந்த வருடத்தில் நேஷனல் அவார்ட்ஸ் வென்ற படங்களை நான் பார்ப்பேன். அப்படிதான் ‘ஜோக்கர்’ பார்த்தேன். இப்போது அந்த இயக்குனரின் படத்திலேயே நடித்திருப்பது எனக்கே ஆச்சர்யம். எதிர்பாராத ஒன்று. நாம விரும்பி பார்த்த படத்தின் இயக்குனர் கூடவே சேர்ந்து ஒர்க் பண்ணும்போது உண்மையிலேயே நல்ல அனுபவமாக இருந்துச்சு.

வகிதா என்ற இஸ்லாமிய பெண் கேரக்டர் என்னமாதிரியான சேலஞ்ச ஏற்படுத்துச்சு?

நான் வட இந்தியாவைச் சேர்ந்தவள். நான் ரொம்ப ஜாலியானவள். என் அம்மா-அப்பாவும் ரொம்ப கூலானவர்கள். ஆனால் இந்த படத்தில் நான் நடிச்ச கேரக்டர் பழமைவாத குடும்பத்தைச் சேர்ந்த அமைதியான, சாந்தமான பெண். வெளி உலகை ரசிக்க அவள் விருப்பபட்டாலும், ஏதோ ஒன்றிற்காக தன்னை கண்ட்ரோல் பண்ணிக்கிறாங்க. அந்த கேரக்டரின் பாடிலாங்குவேஜை கையாள கஷ்டமா இருந்துச்சு. ஏன்னா, நான் அதிகமா பேசுறவள். சூட்டிங்ல கூட சீன் முடிஞ்ச பிறகு ஜீவாவை கலாய்ப்பேன்.

எனக்கு இது முதல் படம் என்பதால், பல அழுத்தங்கள் இருந்தது. ஏன்னா இன்னொரு அழகான நடிகை என மக்கள் என்னை சொல்லிவிடக்கூடாது. கேரக்டர நான் சரியாக புரிஞ்சிக்க பல விஷயங்களை ராஜூமுருகன் சார் சொன்னார். பிறகு அந்த கேரக்டரின் எல்லா குணங்களையும் தெரிஞ்சிக்கிட்டு நடிக்க தயாரானேன்.

இந்த மாதிரி ஒரு பொண்ணு நம்மள காதலிக்காதான்னு எல்லாரும் நினைப்பாங்க, இல்லையா?

ஆம். படம் பார்க்கும்போது இது உங்களுக்கே தெரியும். அவர்கள் இருவரும் பார்த்தவுடனேயே மனதளவில் இணைந்தார்கள். வகிதா சுதந்திரமாக இருக்க விரும்பினாள். இந்த உலகை சுற்றிப்பார்க்க விரும்பினாள். அவள் மக்களோடு பேச விரும்பினாள். தனது குடும்பம், ஆசை, கனவு எல்லாவற்றையும் கூற விரும்பினாள். தான் சுதந்திர பறவையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவனை அவள் தேர்ந்தெடுத்தாள்.

நீங்க நிஜத்துல எப்படி?

நான் அதிகமாக பேசுவேன். எப்போதும் ஜாலியாக இருப்பேன். அதிகமாக பயணம் செய்ய விரும்புவேன். கூண்டுப் பறவையாக இல்லாமல் எப்போதும் சுதந்திரமாக இருக்க விரும்புவேன்.

“ஜிப்ஸி’ சூட்டிங் ஸ்பாட்டில் உங்களது சிறந்த தருணம்?

ராஜஸ்தான்ல நடந்த சூட்டிங்கில், அங்கு வந்திருந்த நாட்டுப்புற பாடகர்கள் அருமையாக பாடினாங்க. சூஃபி பாடல், உருது பாடல்களை எல்லாரும் சேர்ந்து பாடினோம்.

ஜிப்ஸி சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மோசமான அனுபவம்?

ராஜஸ்தான் பாலைவனத்தில் சூட்டிங் நடந்தபோது மிகவும் வெக்கையாக இருந்தது. இதனால் அதிகமாக வியர்த்தது. எப்படியும் வெப்பநிலை 50 டிகிரிக்கு மேல் இருந்திருக்கும். இதுதான் மோசமான அனுபவம்.

எப்போ அதிகமா சாப்பிடுவீங்க?

தினமும் (சிரிக்கிறார்)… நான் ஒரு வீகன். அதனால் பால் பொருட்கள், அசைவம் சாப்பிட மாட்டேன். அதனால் எனக்கு தினமும் சீட்டிங் டேஸ் தான். டயட்டிற்காக ப்ரோகோலி மாதிரியான உணவுகளை சாப்பிட மாட்டேன். தால் சாவல், ராஜ்மா சாவல், களி சாவல், பாலக் பண்ணீர் ஆகியவற்றை விரும்பி உண்பேன்.

தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடிச்ச உணவு?

ஆப்பம், தேங்காய் சட்னி, ஹிமாச்சல் பிரதேசத்தில் வடையை பல்லா என சொல்வோம். அங்கும் வடை இதே மாதிரிதான் இருக்கும். ஆனால் ஆப்பம் வித்தியாசமாக இருக்கிறது. ஊத்தாப்பமும் பிடிக்கும்.
ஆமா, அது ஏங்க ஹிமாச்சல் ஆப்பிள் இங்க அதிக விலையில விற்கிறாங்க?
(சிரிக்கிறார்).. அதன் தூய்மைக்காக. அதோட ரெட் கலருக்காக. அப்புறம் டிராவல், டாக்ஸ்’ன்னு நிறைய செலவு ஆகுறதால இங்க விலை அதிகமாயிருக்கு. ஆனால் ஹிமாச்சல்ல விலை ரொம்ப கம்மிதான்.

போட்டி நிறைந்த சினிமாவில் எப்படிச் சமாளிக்கப் போறீங்க?

நாம எல்லோர்கிட்டயும் மத்தவங்ககிட்ட இல்லாத ஏதோ ஒன்னு இருக்கு. நான் நானாக இருக்கிறதையே நம்புறேன். அதுதான் ஆடியன்ஸ்க்கு பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.

தமிழ் எப்போ கத்துக்கப் போறீங்க?

கூடிய சீக்கிரமே. எனக்குத் தெரியாவிட்டாலும், தமிழ் மொழியின் பெருமைகள் பற்றி தெரியும். ‘ஜிப்ஸி’ படப்பிடிப்பில் லாங்குவேஜ் ட்ரெயினர் ஒருவர் எப்போதுமே இருப்பார். தமிழ் வசனங்கள டிரான்ஸ்லேட் பண்ணி சொல்வார். அதே போல் உச்சரிப்பிலும் உதவியாய் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here