மாற்றுத்திறனாளிகள் இனி எழுந்து நிற்கலாம்!

374

எழுந்து நிற்க முடியாத மாற்றுத்திறனாளிகள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. யாருடைய உதவியும் இன்றி உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்து நிற்கவும், எழுந்து நின்று உட்காரவும் வழிவகை செய்திருக்கிறது சென்னை ஐஐடி கல்லூரியால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டேண்டிங் வீல்சேர்.

இதனை சாத்தியமாக்கியவர் ஐஐடி மெக்கானிக்கல் துறை விரிவுரையாளரான சுஜாதா ஸ்ரீனிவாசன். சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவியான இவர், 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே கல்வி மையத்தில் விரிவுரையாளராக இணைந்த பின், சாமானிய மனிதர்களுக்கு உதவக்கூடிய கருவிகளைப் பற்றி ஆய்வு செய்வதில் அதிக ஆர்வமுடன் இருந்தார். அந்த தேடலில் உதித்ததுதான் இந்த ஸ்டேண்டிங் வீல்சேர் என்கிறார் சுஜாதா. அவரிடம் பேசினோம்.

‘’இந்த திட்டத்திற்கான யோசனையை ஹார்ஷல் சௌத்ரி என்ற மாணவர் தனது இறுதியாண்டு ப்ராஜெக்டில் 6 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்தார். மாற்றுத்திறனாளிகளை தானே நிற்க அனுமதிக்கும் சக்கர நாற்காலியின் யோசனை ஒன்றும் புதிதாக ஏற்பட்டதல்ல. இருப்பினும் பொதுவாக இந்த செயல்பாட்டைக் கொண்ட ஒரு அடிப்படை சாதனத்தை தயாரிக்க ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். மேலும் சில உயர் வசதிகளை கொண்ட, இறக்குமதி செய்யப்பட்ட சக்கர நாற்காலி ரூ.10 லட்சம் வரை செல்லக்கூடும். ஆனால் நாங்கள் இந்த சக்கர நாற்காலியை ரூ.15,000க்குள் வாங்குமளவுக்கு உருவாக்கியுள்ளோம்.

இங்கிலாந்தின் வெல்கம் டிரஸ்ட் சார்பில் எங்களுக்கு தேவையான ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஸ்பைனல் ஃபவுண்டேஷன், வேலூர் சிஎம்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஆலோசனைகளையும் யோசனைகளையும் பெற எங்களுக்கு உதவின. கடந்த நான்கு ஆண்டுகளாக அர்ப்பணிப்புள்ள ஒரு டீம் இந்த வீல்சேருக்காக உழைத்து வந்தது. பல பதிப்பு மாற்றங்களுக்குப் பிறகு, ஐஎஸ்ஓ தரநிலை சோதனைகளை நடத்தி, சாதனத்தை பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜான் மருத்துவமனைக்கு அனுப்பினோம். அங்கு 30 பயனர்கள் தலா மூன்று நாட்களுக்கு அதைப் பயன்படுத்தினர். அதன்பின் நாங்கள் அதை அறிமுகப்படுத்தத் தயாரானோம்.

பொதுவாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்தபடியே இருப்பதால் உடலில் ரத்த ஓட்டம் குறையும்; முதுகில் வலி ஏற்படும்; உடல் மரத்துப் போகும்; உடலில் அழுத்தம் அதிகரிக்கும். அதனால் வாரத்தில் மூன்று முறையாவது எழுந்து நிற்க வேண்டும். துர்திர்ஷ்டவசமாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களால் அப்படி எழுந்து நிற்க முடியாது. இந்த புதியவீல்சேரில் மாற்றுத் திறனாளிகள், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்காமல், சிறிது நேரம் எழுந்து நின்று, உடலை இளைப்பாறச் செய்ய உதவும்.

இதன் வடிவமைப்புக்கான உரிமையை பீனிக்ஸ் மருத்துவ அமைப்பு பெற்றுள்ளது. இது சக்கர நாற்காலியை உற்பத்தி செய்து விற்பனை செய்யும். இந்த வீல்சேர் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தாது. உதாரணமாக, ஒருவர் 20 ஆண்டுகளில் நிற்கவில்லை என்றால், அவர்கள் முதலில் இந்த வீல்சேரை பயன்படுத்தும் முன் சில எலும்பு அடர்த்தி சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். சக்கர நாற்காலி வாங்குவதற்கு முன்பு அவர்களின் சிகிச்சையாளருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

வருங்காலத்தில் மேலும் சில முக்கியமான திட்டங்களை வைத்துள்ளோம். அனைத்து நிலப்பரப்பிலும் பயணிக்கும் சக்கர நாற்காலி மற்றும் பொதுவான உடல் இயக்கங்களுக்கு பதிலளிக்கும் சக்கர நாற்காலி ஆகியவை எங்களின் முக்கியமான திட்டங்கள். இரண்டாவது திட்டம் முக்கியமானது. இது பெரு மூளைவாதம் உள்ள குழந்தைகள் உடல் அசைவுகளைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இந்த சக்கர நாற்காலி அவர்களின் உடல் அசைவுகளுக்கேற்ப செயல்படும், அதாவது குழந்தை ஒரு பக்கமாக சாய்ந்தால், அதற்கேற்றவாறு அதுவும் திரும்பும்; குழந்தை முன்னோக்கி சாய்ந்தால், அதுவும் முன்நோக்கி செல்லும்” என்கிறார் சுஜாதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here