‘ஹீரோக்களுக்கு தான் என்னோட சப்போர்ட்’ – அபர்ணா பாலமுரளி

334
‘ஹீரோக்களுக்கு தான் என்னோட சப்போர்ட்’ – அபர்ணா பாலமுரளி

உற்சாகத்தில் மிதக்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி. கேரளத்து வரவான அபர்ணா தமிழில் கதாநாயகியாக இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் ஈட்டிய வெற்றியோடு ஒப்பிடுகையில் இங்கு அவர் நினைத்த அளவிற்கு சோபிக்க முடியவில்லை. இச்சூழலில்தான் ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதால் நம்பிக்கையும் மகிழ்ச்சியுமாக திளைக்கிறார் அபர்ணா.

‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.கே.கோபிநாத்தின் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால், இப்படத்தின் ஒரு பாடலை நடிகர் சூர்யாவின் ஏற்பாட்டில் ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்கள் மத்தியில் வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டுகளை பெற்றது. இதனால் இந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் ‘சூரரைப் போற்று’ படமும் ஒன்றாகியுள்ளது. இப்படத்தில் கமிட்டான அனுபவங்களை பகிர்கிறார் அபர்ணா..

வழக்கமான கேள்விதான். சொல்லுங்க… எப்படி ஃபீல் பண்றீங்க?

(சிரிக்கிறார்) ஒரு வருஷத்துக்கு முன்னாடி, ‘’சூரரைப் போற்று’ படத்துக்கான ஆடிஷனுக்கு கால் பண்ணாங்க. இரண்டு தடவ ஆடிஷன் போயிருக்கேன். ஆனா நான் செலக்ட் ஆக வாய்ப்பு இல்லனுதான் நினைச்சேன். அதனால ஆடிஷன் கூப்டபோ நான் ரொம்ப எஸ்சைட் ஆகல. என்னோட ஃபிரெண்ட்ஸுக்கு கூட ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகு தான் சொன்னேன்.

எனக்கு தமிழ் சரியா தெரியாது. என்னோட முதல் தமிழ்ப் படத்துல ஏதோ பண்ணி சமாளிச்சிட்டேன். ஆனா ‘சூரரைப் போற்று’ ஆடிஷன் போயிருந்தப்போ, அதுல வர்ற மதுரை ஸ்லாங் ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா டைரக்டர் சுதா கொங்கரா என்னை ரிஜெக்ட் பண்ண விரும்பலனு நினைக்கிறேன். கொஞ்சம் மதுரை ஸ்லாங் பிராக்டீஸ் பண்ணிட்டு வரச் சொன்னாங்க.

நான் மறுபடியும் அந்த டயலாக் பேசி வீடியோ ரெகார்ட் பண்ணி அவங்களுக்கு அனுப்பினேன். ஷூட்டிங் ஆரம்பிக்கிற வரைக்கும் என்னை செலக்ட் பண்ணியிருக்காங்களா இல்லையானு எனக்கே தெரியாது. காண்ட்ராக்ட் ஒன்னும் சைன் பண்ணேன். ஆனா சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது.

‘சூரரைப் போற்று’ படம் கமிட் ஆனபிறகு, அஞ்சு தடவைக்கு மேல ஸ்கிரிப்ட் வாசிச்சு இருக்கேன். அதனாலேயே, இப்போ இன்னும் நல்லா தமிழ் இம்ப்ரூவ் ஆகியிருக்கு.

போன வருஷம் நடந்த ‘அம்மா’ (கேரள நடிகர் சங்கம்) விழாவுல சூர்யா சார் தான் முக்கிய விருந்தினரா வந்திருந்தாங்க. மோகன்லால் சார், மம்முட்டி சார் கூட முதல் வரிசைல உட்கார்ந்திருந்தாங்க. ஹீரோயின்ஸ் நிறைய பேர் சூரியா சார் கூட போட்டோ எடுக்க போனாங்க. ஆனா நான் போகல. ‘சூரரைப் போற்று’ பட சூட் அப்போ நிறைய செல்ஃபி எடுத்துக்கலாம்னு விட்டுட்டேன்.

ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, க்ரூ மெம்பெர்ஸ் எல்லாரும் சேர்ந்து 3 தடவ டிஸ்கஸ் பண்ணோம். அதனால இந்த படத்த பத்தி நல்ல தெரிஞ்சுக்க முடிஞ்சுது. சூர்யா சார் செட்க்கு வரும்போது அவர்கூடயும் பேசினேன். சூர்யா சார் ரொம்ப ரிசெர்வ்ட் பெர்சன். லுக், ரியாக்ஷன் சரியா வரணும்னு நிறைய மெனக்கிடுவார்.

‘சூரரைப் போற்று’ என்றால் திறமையாளர்களுக்கு அங்கீகாரம் என அர்த்தம். நிறைய திறமைகளை இந்த படத்தில் காணலாம். இந்த படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப முக்கியமானது.

இயக்குனர் சுதா கொங்கராவுடன் பணியாற்றுவது குறித்து…?

அவர் ஒரு மிகச்சிறந்த பெண் இயக்குனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகள்ல பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்காங்க. ‘சூரரைப் போற்று’ படத்துக்காக 2 வருஷம் ஹோம் ஒர்க் பண்ணிருக்காங்க. ஒவ்வொரு சீனும் அருமையா, முழுமையா, தத்ரூபமா இருக்கணும்னு கடினமா உழைக்கிறாங்க.

பெமினிசம் பற்றிய உங்கள் கருத்து..

பெண்களை உயர்வாக பேசிட்டு, ஆண்களை தரம் தாழ்த்துறது பெமினிசம் இல்ல. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கிறது. ஆனால் இப்போ மக்கள் அதை தேவையில்லாமல் பெரிசுபடுத்துறாங்கனு தோணுது. இது ஆண்களை கீழே இழுத்துவிட்டு, பெண்கள் உயர பறப்பது அல்ல. இருவருமே சமமாக நடத்தப்படுவதே பெமினிசம்.

சினிமாத் துறையில் நடிகர்-நடிகைகளுக்கான சம்பள ஏற்றத்தாழ்வு பற்றி?

ஆமா. இண்டஸ்ட்ரில நடிகர் நடிகையர்களை ட்ரீட் பண்ற விதத்திலும் சரி பேமெண்டும் விஷயத்திலும் சரி வித்தியாசம் இருக்கு. மக்கள்கிட்டயும் மார்க்கெட்லயும் ஒரு ஹீரோவோட முதல் படம் வெற்றிப்படம் ஆகலேன்னா மொத்த சினிமா இண்டஸ்ட்ரியே அவங்கள கை கழுவிருவாங்க. அதேசமயம் ஹீரோயின்களுக்கு இந்த கவலை இல்லை. அடுத்தடுத்த படங்கள் வந்துகிட்டே இருக்கும். அதனால இந்த விஷயத்துல ஹீரோக்களுக்கு தான் என்னோட சப்போர்ட்.

என்னமாதிரியான கேரக்டர் பண்ண ஆசை?

இதுவரை ரொமாண்டிக் கேரக்டர் அதிகம் பண்ணினது இல்லை. துருதுருன்னு வெகுளித்தனமான கேரக்டர் பண்றதுலதான் எனக்கு அதிக விருப்பம். சில இயக்குனர்கள் தைரியமான பொண்ணு கேரக்டர் இருக்குன்னு அப்ரோச் பண்றாங்க. அந்த மாதிரி கேரக்டர்ல எனக்கு விருப்பமில்லை.

ஒரு தைரியமான பெண்ணின் அடையாளம் புல்லட் பைக் ஓட்டுறதோ, சிகரெட் குடிக்கிறதோ இல்ல. தனக்குன்னு ஒரு அடையாளம், தனக்குன்னு ஒரு கொள்கையோட வாழ்றதுதான் தைரியமான பெண்ணின் அடையாளம். ஆனா இப்ப வர்ற சினிமால பெண்களின் தனித்தன்மை, குணம் என்பதை விட ‘டாம்பாய்’ மாதிரியான கேரக்டர்ஸ்ல தான் வடிவமைக்கிறாங்க.

மலையாளத்துல 15 படங்கள் பண்ணிருக்கீங்க. ஆனால் தமிழ்ல ஏன் இவ்வளவு கம்மியான படங்கள்?

கோலிவுட் ஒரு மிகப்பெரிய சினிமா இண்டஸ்ட்ரீ. நான் கோலிவுட்க்கு வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை. அதனால இங்க கிடைக்கக்கூடிய வாயப்புகள நல்லபடியா பயன்படுத்தணும்ங்கிற முடிவுல இருக்கேன்.

இண்டஸ்ட்ரில இருக்கிற இன்னொரு பயங்கரமான விஷயம் என்னன்னா ஒரே மாதிரியான கேரக்டர்ஸ்க்கே அப்ரோச் பண்றது. நம்ம பண்ண ஒரு கேரக்டர் நல்லா வந்திருச்சுன்னா, அதே மாதிரியான கேரக்டருக்குனு பிராண்ட் பண்ணிடுறாங்க. வேற ஒரு புதுமையான நல்ல கேரக்டர் பண்ண முடியாம போயிடுது. உதாரணத்துக்கு மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துல என்னோட ஜிம்சி கேரக்டர் நல்ல பிரபலம் ஆனதால அதே மாதிரி கேரக்டர்ஸ் தான் எனக்கு நிறைய வந்தது.

பாடகி அபர்ணா பற்றி?

மலையாளத்தில் நிறைய பாடல்கள் பாடியிருக்கேன். தமிழில் `எட்டு தோட்டாக்கள்’லகூட பாடியிருக்கேன். அப்பா, அம்மா இரண்டு பேருமே இசைக்கலைஞர்கள்தான். எதிர்பாராமல்தான் நடிக்க வந்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here