வந்தேண்டா பால்காரன்…

1697

பசுமைப் போர்த்திய மலைத்தொடர்; அதன் அடிவாரத்தில் அழகான ஓர் குக்கிராமம்; அங்கே குடிகொண்டிருக்கும் ஒரு சாமானியர்; அந்த மனிதரின் எளிய வாழ்க்கைப் பக்கங்கள்தான் இவை!

அதிகாலை 3 மணி. உடலின் எலும்பு வரை துளைத்து வாட்டி வதைக்கிறது தென்மேற்குப் பருவக்காற்று. சாமக்கோழிகள் அப்போதுதான் கூவத் தொடங்கின. மொத்த கிராமமும் போர்வைவை இழுத்துப் போர்த்தி தூயில் கொண்டிருக்க, ‘லைட்’ போட்டு கதவை திறக்கிறது ஒரு வீடு. முகத்தை கழுவிவிட்டு துண்டால் தலைப்பாகை கட்டிக்கொண்டு வெளியே வருகிறார் ஒருவர். பால் கேனை பைக்கின் பின்புறம் கட்டிக்கொண்டு, ஒருபக்கம் வாளியை தொங்கவிட்டு பைக்கை உதைத்து விர்ரென்று கிளம்புகிறார். அவர்தான் பால்காரரான மாரியப்பன்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் பயணித்தால், சொக்கும் இயற்கை எழிலும், சொட்டும் இதமான சூழலுமாக நம்மை வரவேற்கிறது மேக்கரை. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் மடியில் வீற்றிருக்கும் இக்கிராமம்தான், மாரியப்பனின் சொந்த ஊர். தமிழகத்தின் எல்லை கிராமமும்கூட. மேக்கரைக்கு அடுத்து கேரள மாநில எல்கை தொடங்குகிறது.

அதிகாலையில் பால் கறவையை முடித்துவிட்டு, கறந்த பாலில் கமழும் ஒருவித மணமும் மெல்லிய கதகதப்பும் தணிவதற்குள் பாலை ஏற்றிக்கொண்டு விநியோகம் செய்ய கிளம்பி விடுகிறார் மாரியப்பன். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலை பருகி பழக்கமாகிவிட்ட நமக்கு, கிராமங்களில் இன்னமும் கறந்து முடித்த கையோடு, பைக்கில் தெருத்தெருவாக சென்று மணியடித்து அழைத்து பாத்திரங்களில் பால் ஊற்றுவது, சற்று பொறாமை கொள்ளத்தான் செய்தது.

‘விரைவான டோர் டெலிவரி நாங்கள்தான்’ என போட்டிபோட்டுக் கொண்டு நிற்கும் இன்றைய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடி, நம்மூர் பால்காரர்கள் தான். காலை ஏழு – ஏழரை மணிக்கு நமக்கு பால் கிடைப்பதற்கு, இரவு 2.30 மணி முதல் துாக்கத்தை துறந்து உழைக்கிறார்கள் பால்காரர்கள். நாம் தூக்கத்தில் துரத்தும் கனவை இவர்கள் தூங்காமல் துரத்துகிறார்கள். மாரியப்பனிடம் பேசினோம். பால் மன(ண)தோடு பேசத் தொடங்கினார்.

”பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த கிராமத்துலதான். படிப்பு எதுவும் கிடையாது. முதல்ல விவசாயம்தான் பாத்திட்டு இருந்தேன். கூடவே ஆடு மாடு கொஞ்சம் இருந்தது. விவசாயத்துல நட்டமாச்சுன்னு வேற ஏதாவது தொழில் தொடங்கலாமான்னு, கொஞ்சம் காலம் தலைய பிச்சிக்கிட்டு இருந்தேன். ‘கையில வெண்ணெய வைச்சிட்டு நெய்க்கு அலைஞ்ச கதையா இருந்த நேரத்துலதான், பால் வியாபாரத்துக்கு மாற்னேன். இப்ப 22 வருஷமா பால்காரனா இருக்கேன்.

பால்காரன் வேலைன்னா சும்மா இல்லை. வருஷம் முழுதும் பேப்பர் போடுறவங்களுக்குகூட ரெண்டு மூணு நாள் லீவு கிடைக்கும். ஆனா பால்காரங்களுக்கு லீவு’ங்கிறதே கிடைக்காது. மழை பெஞ்சாலும், பனி அடிச்சாலும் போகாம இருக்க முடியாது. ஒருநாள் பார்ப்பாங்க. ரெண்டாவது நாளும் வரலன்னா ஆள் மாத்திடுவாங்க.
பால்காரங்க உடம்ப ஆரோக்கியமா வைச்சுக்கிறதும், சுறுசுறுப்பா இருக்கறதும் ரொம்ப முக்கியம். இதுக்காகவே தண்ணீ, சிகரெட் எதையும் பெரும்பாலும் நாங்க தொடுறது இல்ல. சரியான நேரத்துக்கு தூங்கணும், சாமக்கோழி கூவுறதுக்கு முன்னாடியே எந்திரிக்கணும், நேரத்துக்கு பால கொண்டு சேர்க்கணும்.. ராத்திரி 10 மணிக்குள்ள தூங்குனாதான் ரெண்டரை மணிக்கு எழும்பமுடியும். உடம்பு, கைய சுத்தபத்தமா வைச்சுக்கணும். கடுகளவு அழுக்கு பட்டாபோதும் மொத்த பாலும் கெட்டுப் போயிடும்.

காலை அஞ்சு மணிக்குள்ள பால் கறந்து முடிச்சிட்டு, கேரளாவுல அச்சன்கோவில் என்கிற ஏரியாக்கு போய் பால் ஊத்துவேன். கடை, வீடுகளுக்கு பால் ஊத்தி முடிச்சிட்டு வீடு திரும்புறதுக்கு மதியம் 12 மணி ஆயிடும். மறுபடியும் நாலு மணிக்கு பால் கறக்க கிளம்பிடுவேன். சாயங்காலம் உள்ளூர்லயே பால் ஊத்துவேன். அத முடிச்சிட்டு திரும்ப ராத்திரி ஒன்பதரை மணி ஆயிடும். தினமும் இப்படித்தான் வாழ்க்கை ஓடுது’’ என, பெருமூச்சு விடுகிறார் மாரியப்பன்.

தென்னை, நெல்லி, மா, அண்டி, இலவம் பஞ்சு என சூரியக்கதிர்கள் நுழைய முடியாத அளவுக்கு மரந்தோப்பால் சூழ்ந்திருக்கிறது மாரியப்பன் வசிக் கொண்டிருக்கும் வீடு. வீட்டின் முற்றம் நிழலும் குளிர்ச்சியுமாக மனதுக்கு இதமளிக்கிறது. அங்கே சில ஆடு, மாடு, கோழிகள், நாய்களும் வளர்கின்றன. வீட்டின் பின்புறம் அழகான ஒரு மலைக்குன்று.

விஷால் மற்றும் ஆர்யா நடித்த ‘அவன் இவன்’ திரைப்படம் மேக்கரை கிராமத்தில்தான் படமாக்கப்பட்டது. மலையின் வியூ பாயிண்டை காண்பிக்க மாரியப்பன் வீட்டிலிருந்துதான் ‘ஷாட்’ எடுத்தார்களாம். வீட்டு அருகிலேயே சிறிய ஊற்று ஒன்று இருக்கிறது. வருடம் முழுவதும் இதில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்குமாம். குடிப்பதற்கும் புழக்கத்திற்கும் இந்த நீரை மட்டுமே பயன்படுத்துவதாக சொல்கிறார் மாரியப்பன்.

”தான் பெற்றெடுத்த குழந்தைக்கு பால் ஊட்டும் தருணத்தில் தாய்க்கு கூடுதலாக பாசம் வெளிப்படும். அந்த தாய்ப்பாசம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. பசுவும் அப்படித்தான்’’ என நெகிழ்ச்சியூட்டுகிறார் மாரியப்பன். தொடர்ந்து அவர், ’’பசுக்களுக்கு தாய்ப்பாசம் அதிகம். கன்னுக்குட்டி பால் குடிக்கும்போது, அத தன்னோட நாக்கால நக்கி அன்ப வெளிப்படுத்தும் தாய்ப்பசு. ‘கன்றைப் பிரிந்த பசுவைப் போல’ன்னு தமிழ்ல்ல ஒரு உவமையே உண்டு. இப்படி பசு – கன்னுக்குட்டி பாசத்த பத்தி நிறைய சொல்லலாம். குறிப்பா, நம்ம நாட்டு மாடுகளுக்குதான் தாய்ப்பாசம் அதிகம். இந்த வெளிநாட்டுல இருந்து வர்ற கலப்பின மாடுகளுக்கு இந்த பாசம் குறைவுதான்’’ என கால்நடைகளின் உளவியலை அடுக்கடுக்காக விளக்குகிறார் மாரியப்பன்.

தொடர்ந்து அவர், ‘’இசக்கிராஜா, இளையராஜா, அந்தோணி, ஜெனிலா..ன்னு நாலு பிள்ளைங்க. மனைவி பேரு விஜிராஜ். அவங்க விவசாய வேலைக்கு போறாங்க. ஒரு நாளைக்கு 100 லிட்டர் பால் விற்கிறேன். ஏதோ கஷ்ட நஷ்டம் இல்லாம வாழ்க்கை நகருது. இப்ப இருக்குற மாதிரியே போதும்னு தோணுது.

எங்க மேக்கரை கிராமம் மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அடிவாரத்துல இருக்குறதால எப்போதும் செழிப்பா இருக்கும். இங்கயே அடவிநயினார் அணை’ன்னு ஒரு பெரிய டேமும் இருக்குது. அதனால இப்பயும் இங்க முப்போகம் விவசாயம் நடக்குது. பத்து ஏக்கர்ல விவசாய நிலம் சும்மாதான் கிடக்குது. கொஞ்சமா மரவள்ளிக்கிழங்கு பயிர் போட்ருக்கேன். சொந்தமா அம்பது மாடுகள் வாங்கி ஒரு பால் மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கணும் என்கிறதுதான் என்னோட கனவு”என்கிறார் மாரியப்பன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here