தடம் மாறுகிறதா தமிழ் சினிமா?

627
தடம் மாறுகிறதா தமிழ் சினிமா?

மிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திற்கேற்ப ஒரு வகையான திரைப்படங்கள் டிரெண்ட் ஆகும். ஒரு அரசியல் நையாண்டி படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து அதேபோல் அரசியல் படங்கள் வெளிவரும். சைக்காலஜி த்ரில்லர், காமெடி பேய், பயோபிக் படம் மெகா வசூல் குவித்தால் அடுத்தடுத்து அதே பாணியில் படங்கள் வெளியாகும். அந்த வகையில் இப்போது தமிழ் சினிமாவில் சாதிப் பின்னணி கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அசுரன், நாடோடிகள் 2, கன்னி மாடம், திரௌபதி, எட்டுத்திக்கும் பற… என இப்பட்டியல் நீள்கிறது. அடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘கர்ணன்’ படமும் சாதிய கதைக்களத்தை கொண்டதுதான் என்கிறார்கள்.

இதற்கு முன்னதாக 90-களிலும் நாட்டாமை, தேவர்மகன், பெரிய கவுண்டர் பொண்ணு, சின்ன கவுண்டர், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட சாதிப் பெருமை/பின்னணி கொண்ட படங்கள் அதிகம் வெளியாகி இருந்தாலும் அவை பிற சமூகத்தை குற்றம் குறை சொல்லாமல் கதாநாயகர்களின் வாழ்வியல் சார்ந்த கதைக்களமாகவே இருந்தன. ஆனால் தற்போது சமீபகாலமாக வெளிவரும் சாதிப் பின்னணி கொண்ட படங்கள் பல, அடுத்த சாதியை மறைமுகமாக சீண்டி பின்னப்பட்ட மையக்கருவாகவே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் இவ்வகையான படங்களில் வரும் சில சாதிரீதியிலான வசனங்கள் சர்ச்சைக்குள்ளாகி, சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்புவதால் அதுவே படத்துக்கு விளம்பரமாகி பெரிய அளவில் கவனம் ஈர்ப்பதால், இதுபோன்ற படங்களை தயாரிப்பதில் திரைத்துறையினர் ஆர்வம் காட்டுவதாக கூறுகின்றனர் சினிமா விமர்சகர்கள்.

சாதிப் பின்னணி படங்கள் அதிகரித்திருப்பதன் பின்னணி என்ன? சாதிப் பின்னணி என்ற போர்வையில் வரும் சில படங்கள் பிற்போக்குத்தனமான கருத்துக்களை பார்வையாளர்கள் மீது திணிக்கின்றனவா? இன்னொரு சமூகத்தினரை சீண்டிப்பார்க்கும் படங்களால் தடம் மாறுகிறதா தமிழ் சினிமா? சாதிய கதைக்கள படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இளைய சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனவா? இக்கேள்விகளை பல்வேறு தரப்பினரிடமும் முன்வைத்தோம்.

இயக்குனர் வசந்தபாலன் கூறும்போது, ‘’சினிமா படங்களுக்கு ஒரு சக்சஸ்ஃபுல்லான கண்டென்ட் தான் எப்போதும் தேவை. அதைத்தேடியே திரைத்துறை படைப்பாளர்கள் பின்தொடர்வார்கள். ஆனால் அந்த கண்டென்ட் எதுவென்பது யாருக்கும் தெரியாது. எனவே புதிதாக ஒருவர் அதை கண்டடைந்தால் மற்றவர்களுக்கும் அதையே தெரிவு செய்வார்கள். இது தமிழ் சினிமாவில் இருக்கும் காலங்காலமான நடைமுறை. எனவே இப்படித்தான் இப்போது சாதிரீதியலான மையக்கரு படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன.

‘மெட்ராஸ்’ படத்தில் இயக்குனரும் பா.ரஞ்சித்தும், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் மாரி செல்வராஜூம் தங்களது நுட்பமான கருத்துக்களை நேர்மையாக சொல்லியிருப்பார்கள். அதேபோல் இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் துணிச்சல் மிகுந்த இயக்குனர்களில் ஒருவர். ‘அசுரன்’ படத்தில் சாதிய – வர்க்க அடக்குமுறைகளுக்கு எதிரான கதைக்கருவை அவ்வளவு துணிச்சலாக எடுத்துரைத்தார். இத்தகைய படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றிகளைக் குவித்ததைப் பார்த்து சிலர் தாங்களும் சாதிப் பின்னணி படங்கள் எடுக்கிறோம் என்று இப்போது கிளம்பியிருக்கிறார்கள்.

சரி, சாதிப் பின்னணியில் என்னமாதிரியான உள்ளடகத்தை தெரிவு செய்யலாம் என குழம்பிப்போன சிலர், குப்பைக் கதைகளும் கிளறி, பிற்போக்குத்தனமான திரைக்கதையை வடிவமைத்து திரையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய படங்களை பார்வையாளர்களும், பத்திரிகைகளும்தான் இனங்கண்டு, விமர்சனம் என்கிற பெயரில் ப்ரொமோட் செய்வதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்ட போலியான படங்கள், நேர்மையான கதைக்கரு கொண்ட படங்கள் விதைத்துச் சென்ற கருத்தியலை மடைமாற்றிவிடும் என்பதால்தான் இப்படிச் சொல்கிறேன். எனவே மக்கள் மெய்யையும் பொய்யையும் வேறுபடுத்திக் கண்டறிந்துக் கொள்ள வேண்டும்.

ஒருநேரத்தில் ‘போதும்டா சாமி’ என்று ரசிகர்கள் சலித்தக் கொள்ளுமளவிற்கு காமெடி பேய் படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. பின்னர் அந்த படங்களின் டிரெண்ட் நின்றுபோனது. அந்த வரிசையில் இப்போது சாதிப் பின்னணி படங்கள். இன்னும் கொஞ்சம் நாட்களில் அதன்மீதான ஆர்வம் பார்வையாளர்களிடையே குறையும். தானாகவே அதன் டிரெண்ட் நின்றுபோகும்’’ என்கிறார் அவர்.

இயக்குனர் அஜயன் பாலா, ‘’சாதிப் பின்னணி படங்களின் வரத்து அதிகரிப்பு என்பது உண்மையில் அது ஆபத்தான போக்கு. எல்லாத் துறைகளும் கார்ப்பரேட்மயமாகி விட்ட சூழலில், மக்கள் அடையாளங்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அடையாளங்களை நோக்கி மண்ணுக்கு திரும்பும்போது அங்கு தானாகவே சாதிப்பற்று தொற்றிக்கொள்ளும். அதனால் சாதிப் பின்னணி குறித்த சிந்தனை மக்களிடம் வடிவமெடுக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஒரே சாதிப்பிரிவுக்காக உருவாக்கப்படும் பக்கங்கள், குழுக்களே இதற்கு சாட்சி. இதனுடைய வெளிப்பாடுகளைதான் சினிமா எதிரொலிக்கிறது. எனவே திரைப்படங்கள் சமூக கருத்தியலை எதிரொலிப்பது என்பது தவிர்க்கமுடியாதது’’ என்கிறார் அவர்.

திரைப்பட ஆர்வலரும், குறும்பட படைப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கும் தமிழ் ஸ்டூடியோ அமைப்பின் நிறுவனருமான அருண் மோ கூறும்போது, ‘’தமிழ் சினிமாவில் சாதிய அடையாளங்களுடன் படங்கள் எப்போது வந்துக்கொண்டேதான் இருக்கிறது. 80களின் பிற்பகுதியில் 90களின் தொடக்கத்தில் தமிழ் சினிமா சாதிய அடையாளங்களுடன் தீவிரமாக வெளிக்காட்டத் தொடங்கியது. தேவர் மகன், சின்னக்கவுண்டர், எஜமான் என குறிப்பிட்ட சாதிப்பெயரையே தலைப்பாக வைத்து படங்கள் வெளிவர தொடங்கியது.

பெரியாரின் வருகைக்கு பின்னர் சாதி பெயரை பின்னொட்டாக தமிழர்கள் பயன்படுத்தாத காலக்கட்டத்தில் சாதி பெயரையே தலைப்பாக முன்வைத்து படங்கள் வெளிவரத்தொடங்கியது அவரது மறைவுக்கு பின்னரே. ஆனால் இந்த காலக்கட்டத்தில் 24 மணிநேரம் செய்தியை நேரலையாக ஒளிபரப்பும் ஊடங்கங்களோ, சமூக வலைத்தளங்களோ பயன்பாட்டில் இல்லை. எனவே இத்தகைய படங்களின் வருகையும், அவை ஏற்படுத்திய தாக்கமும் பெரிய அளவில் பரவலாக சமூகத்தில் எல்லா தட்டு மக்களையும் சென்று சேரவில்லை.

இப்படி சாதிப்பெருமையை பேசும் விதமாகவோ அல்லது மறைமுகமாக சாதிய விசுவாசத்தை காட்டும் விதமாகவே தமிழில் வெளியாகும் எல்லாப்படங்களுமே ஆண்ட சாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சாதியை மையமாக வைத்தே வெளியானது.

இதற்கிடையில் தமிழில் இரணியன், அரவிந்தன் போன்ற சில படங்கள் தலித் மக்களின் வாழ்வியலை பேசும் விதமாக வெளியாகின. ஆனால் இந்த படங்கள் எவையும் பெரிய வணிக வெற்றியோ அல்லது பரவலான விமர்சனத்தையோ பெறாமல் முடங்கின அல்லது முடக்கப்பட்டன. தமிழில் பிரபலமான அல்லது முன்னிலையில் இருக்கும் எந்த கதாநாயகனும் தலித் வாழ்வியலை பேசும் படங்களில் நடிக்க தயாராக இல்லை.

இதற்கிடையில் சமூக ஊடங்களின் தாக்கம் அதிகமான காலக்கட்டத்தில் இயக்குனர் ரஞ்சித் முழுக்க முழுக்க தலித் அரசியலை மையப்படுத்தி படங்களை எடுக்க தொடங்கினார். ஆனால் இவை யாவும் இரணியன், அரவிந்தன் போன்ற படங்களில் இருந்து தனித்து தெரிய முக்கிய காரணம், அந்த படங்களில் இருந்து ஸ்டார் வேல்யூ என்று சொல்லப்படுகிற கதாநாயக பிம்பம். உச்சக்கட்டமாக ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என தொடர்ந்து தலித் அரசியலை முன்வைத்து ரஞ்சித் படங்கள் எடுக்கவே அதுவரை தமிழ் சினிமாவில் மறைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியல் பேசுபொருளானது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கதாநாயக பிம்பம். இதன் இன்னொரு பரிமாணமாக தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம், உச்சபட்சமாக ஒரு நாயக பிம்பத்தை தாங்கி, அதன் பின்னனணியில் தலித் அரசியல் என்பதையும் பேசுபொருளாக கொண்டு வெளியானது.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசுவதும், ஒடுக்கியோரின் வாழ்வியலை பேசுவதும் ஒன்றல்ல. இதுவரை இலைமறை காயாக சாதிய அடையாளங்களை வெளிப்படுத்திய தமிழ் படங்கள் இப்போது நேரடியாகவே இன்ன சாதிக்குத்தான் படம் எடுக்கிறோம் என்று வெளிப்படையாக களமிறங்கிவிட்டது. அதற்கு சமீபத்திய உதாரணம் ‘திரௌபதி’. மராத்தியில் பன்றியும், சாய்ராத்தும் வெளியானதால் தலித்துகளின் குரல் ஓங்குகிறது, நாங்களும் எங்கள் சாதிக்காக படம் எடுக்கிறோம் என்று யாரும் களமிறங்கவில்லை. காரணம் பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் குரல் முதல் முறையாக வெளிப்படும்போது அது கொஞ்சம் காத்திரமாகத்தான் வெளிப்படும். அதனை திமிர் என்றோ சாதிய அராஜகம் என்றோ வகைப்படுத்த முடியாது.

தலித் அரசியல் தவிர்த்து, மற்ற சாதியை தூக்கிப்பிடித்து படமெடுக்கும் போக்கு அதிகரிக்க இன்னொரு காரணம், உருப்படியாக படம் எடுக்க தெரியாமல், அதற்கான நிதி கிடைக்காமல் சாதி எனும் கூட்டுக்குள் அடைத்துக்கொண்டு, அதனை பாதுகாப்பு பெட்டமாகவும், பணம் கறக்கும் கேந்திரமாகவும் மாற்றியமைத்துக்கொள்ள விரும்புவதே. இப்படியாக உண்மைக்கு எதிராக, ஒடுக்கப்பட்டோரையே குற்றவாளியாக பாவிக்கும் படங்களுக்கு எந்த சாதிய அமைப்புகளும், மக்களும் ஆதரவு அளிக்காமல் அமைதியாக விட்டுவிட்டால் சாதிய அடையாளங்களுடன் படங்கள் வெளிவருவது குறைந்துவிடும்.

தமிழில் பல ஆண்டு காலமாக மற்ற எல்லா சாதியையும் மையப்படுத்தி, பெருமைப்படுத்தி படங்கள் வெளிவரவே செய்கிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் தலித் அரசியலை மையப்படுத்தி படங்கள் வெளிவருகிறது. அவர்கள் தங்கள் பெருமையை பேசவில்லை, மாறாக எங்களை ஏன் இத்தனை ஆண்டுகளாக ஒடுக்கி வைத்திருந்தீர்கள், கடுமையாக சாதி ரீதியாக தாக்கீனீர்கள் என்பதற்கு நியாயம் கேட்கிறார்கள். அந்த நியாயத்தை உங்களுக்கு உணர்த்த எங்களோடு கலந்துரையாட வாருங்கள் என்கிறார்கள். நாம் கலந்துரையாக தயாராக இல்லாமல், மீண்டும் அவர்களை கலை ரீதியாக ஒடுக்கவே முயற்சிக்கிறோம். அதற்கும் நீங்களே காரணம் என்று அவர்களை குற்றவாளியாக்குகிறோம்’’ என ஆதங்கப்படுகிறார் அவர்.

அரசியல் பார்வையாளர் ஸ்ரீதர் சுப்ரமணியம் கூறும்போது, ‘’நாம் எப்பொழுதுமே சாதியப் பெருமை பேசித்தான் வந்திருக்கிறோம். தேவர் காலடி மண்ணை போற்றிப் பாடியதும், சின்னக் கவுண்டர் மேல் ஊராரின் கொள்ளிக்கண்ணு பட்டு விடுமோ என்று கவலைப்பட்டதும் நாம்தானே? தலித் என்ற ஒரு சமூகம் இந்த உலகில் வாழ்வதே தமிழ்த் திரையுலகுக்கு ஏழு ஆண்டுகள் முன்னர்தானே தெரிய வந்தது?

போலவே ஆணாதிக்கவாதமும் நம்மிடம் ஊறியே இருந்திருக்கிறது. எம்ஜிஆர் முதல் ரஜினி, விஜய் வரை பெண்களுக்கு அடக்க ஒடுக்கம் பற்றி அறிவுரைகள் வழங்காத ஹீரோ உண்டா? திரையில் ஹீரோயினை அறையாத தமிழ் ஹீரோ உண்டா? முதன் முதலில் விதவை மறுமணம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட தமிழ்ப்படம் ‘புதிய சகாப்தம்’ 1985ல் வந்தது; அதாவது சட்டத்திருத்தம் நிகழ்ந்து 35 ஆண்டுகள் கழித்து. அதற்கு ஒரு வருடம் முன்பு வெளிவந்த ‘நான் பாடும் பாடல்’ கூட அதற்குத் துணியவில்லை. படத்தின் கிளைமேக்ஸ்சில் ஹீரோ விதவை ஹீரோயினுக்கு குங்குமப் பொட்டு இட்டு தன் காதலை தெரியப் படுத்துவான். அவள் அதிர்ந்து போய் அவனைப் பளார் என்று அறைந்து விடுவாள். பின் ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்து நெற்றியில் தீய்த்து இட்ட குங்குமத்தை அழித்து விடுவாள். ‘பண்பாட்டின் இலக்கணம் இந்தப் பெண்தான்,’ என்ற சேதியுடன் இயக்குனர் டைட்டில் கார்டு போட்டு படம் முடியும். திரையில் துணிச்சலாக பெண்ணியம் பேசிய பாலச்சந்தர் கூட சில எல்லைக் கோடுகளை வரைந்து கொண்டு அவற்றை தாண்டவில்லை.

இது எல்லாம் மாறியது சமீப காலங்களில்தான். ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா, மாரி செல்வராஜ் போன்ற புதிய தலைமுறை இயக்குநர்கள் சாதியை, பெண்களை திரையில் காட்டிய விதம் பெறும் புரட்சிகரமாக அமைந்தது. பாலிவுட்டிலும் புதிய தலைமுறை இயக்குநர்கள் பாரம்பரிய சிந்தனைகளை உடைத்து பட்டையை கிளப்பி வருகிறார்கள். எனவே சாதிப்பெருமை பேசும், பெண்ணடிமைத்தன கருத்துகளை போதிக்கும் படங்கள் இப்போதுதான் வருகின்றன என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

சொல்லப்போனால் திரௌபதி போன்ற படங்களுக்கு வரும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள்தான் எனக்கு ஆச்சரியத்தை ஊட்டுகின்றன. இளைஞர்களிடையே, சமூகத்தினிடையே மாற்றங்கள் வந்திருப்பதை இந்த விமர்சனங்கள் சுட்டுகின்றன. எனவே, என்னைக் கேட்டால் அந்தப் படத்தை எந்த சென்சார் வெட்டும் இன்றி வெளியிட வேண்டும் என்று பரிந்துரைப்பேன். அப்போதுதானே நாம் எல்லாரும் எப்பேர்ப்பட்ட சாதி வெறியர்கள், ஆணாதிக்கவாதிகள் என்று புதிய தலைமறை தெரிந்து கொள்ள முடியும்? நமது வரலாற்றின் சில பக்கங்கள் பற்றிய பெருமை மட்டும் போதாது. வரலாற்றின் பல இருண்ட, குரூர பக்கங்கள் பற்றிய அவமானமும் நமக்கு வேண்டும். அதுதான் மாற்றங்களை வேகப்படுத்தும்.

எனவே, இந்த பிற்போக்குப் படங்கள் புதிய டிரெண்ட் அல்ல; நீண்ட பிற்போக்கு வரலாற்றின் புதிய அத்தியாயம்தான்’’ என்கிறார் அவர்.

சினிமா விமர்சகர் ஷான் கருப்பசாமி கூறும்போது, ‘’சிறந்த தரமான படங்கள் கூட இப்போதெல்லாம் முதல் சில நாட்களில் கல்லா கட்டாவிட்டால் பெரிதாக லாபம் ஈட்ட முடியாத சூழல் நிலவுகிறது. குறைந்த நாட்களே திரையரங்குகள் கிடைப்பதால் லாபம் பார்க்க நினைக்கும் ஒரு திரைப்படத்துக்கு விளம்பரம் அவசியம். நாளிதழ்களில் அரைப்பக்கத்துக்கு விளம்பரம் செய்ய கோடிக்கணக்கில் செலவாகும். அதே நேரத்தில் ஒரு சர்ச்சைக்குரிய திரைப்படம் நயா பைசா செலவின்றி எல்லாப் பத்திரிகைகளிலும் விவாதிக்கப்படுகிறது. சமூக வலைதளங்கள் ஓயாமல் திட்டியோ பாராட்டியோ பேசுகின்றன. அதில் என்னதான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவாவது பலர் முதல் இரண்டு நாட்களில் படம் பார்த்து விடுகிறார்கள்.

சரியாக எழுப்பப்பட்ட சர்ச்சை என்பது கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் ஒரு தொழில். சரியா தவறா என்று சிந்திக்காமல் பொதுப்புத்தியை விட்டு விலகிய விவாதத்தைக் கிளப்பும் விஷயங்களை முன்வைத்து திரைப்படங்கள் வர இதுவும் ஒரு காரணம். சாதியைத் தழுவி பிற்போக்கான கருத்துகளைப் பேசும் படங்கள் இதற்கு முன்பும் வந்திருக்கின்றன. ஆனால் அவை சர்க்கரை தடவிய சொற்களில் பார்வையாளர்கள் அறியாமல் சாதியைத் தூக்கிப் பிடித்தன. அப்படிச் செய்தால் சர்ச்சைகள் கிளம்பாது என்பதால் நேரடியாக சிலர் கிளம்பியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

தமிழ் சினிமா எந்தக் காலத்தில் முற்போக்கான கருத்துகளை விதைத்திருக்கிறது என்று தெரியவில்லை. மிகக் குறைவான படங்கள் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தினாலும் பெரும்பாலான படங்கள் பொதுப்புத்தி சார்ந்த பிற்போக்கான கருத்துகளையே பேசிக் கொண்டிருந்தன.

ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்தவனுக்கே எப்படியாவது திருமணம் செய்து வைக்க எம்.ஜி.ஆர்., ரஜினி உட்பட அத்தனை முன்னணி நாயகர்களும் போராடியிருக்கிறார்கள். வில்லனிடம் தங்கையை மணந்து கொண்டு அவள் கற்பைக் காப்பாற்றும்படி காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார்கள். நவீன ஆடைகள் அணியும் பெண்களை கிண்டல் செய்து பாடி ஆடியிருக்கிறார்கள். திருநங்கைகளை ஆபாசமாகவும் இழிவாகவும் சித்தரிக்கும் காட்சிகள் சர்வசாதாரணமாக படங்களில் இருக்கும். அதை ஒரு நகைச்சுவை என்று எண்ணும் அளவுக்குத்தான் தமிழ் சினிமாவின் முற்போக்கு சிந்தனை. இப்படியாக இருக்கும்போது திடீரென்று தமிழ் சினிமா பிற்போக்குக் கருத்துகளை விதைக்கிறது என்ற அதிர்ச்சி யாருக்கு ஏன் வருகிறதென்று புரியவில்லை. எப்போதும் போல பிற்போக்குக் கருத்துடன் புதிய தமிழ் சினிமா வந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்’’ என்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here