களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
வாழைகள் சேதம்
களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததில் 100க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கடமான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இங்கு வாழும் வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் தலையணை வனப்பகுதியில் இருந்து வெளிவந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உள்ள புதுக்குளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது. அங்கு களக்காட்டை சேர்ந்த விவசாயி முத்துவேல் (47) என்பவரின் வாழைத்தோட்டத்துக்குள் நுழைந்த யானை க்கும் மேற்பட்ட 6 மாத ரசகதலி வாழைகளை சாய்த்து சேதப்படுத்தியது. தொடர்ந்து சிவ புரத்தை சேர்ந்த விவசாயி முத்து கிருஷ்ணன் (65) தோட்டத்திலும் 50க்கும் மேற்பட்ட வாழைகளை முறித்து நாசப்படுத்தியதுடன்
மலையடிவார புதர்களுக்குள் சென்றுள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் தண்ணீர் பாய்த்தும், உரங்கள் இட்டு பாதுகாத்து வந்த வாழைகளை நொடி பொழுதில் யானை துவம்சம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தகவலறிந்த களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் (பொறுப்பு) இளங்கோ, வனசரகர் பாலாஜி மற்றும் வனத்துறையினர் யானை நாசம் செய்த வாழைகளை பார்வையிட்டனர்.
யானை சேதப்படுத்திய வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும், மலையடிவாரத்தில் சுற்றி திரியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியிறுத்தினர்.