‘வீட்டுக்கு வீடு நூலகம் அமையும் காலமே அறிவின் பொற்காலம்’ என அடுத்த தலைமுறையை தட்டி எழுப்பிவிட்டுச் சென்றார் பேரறிஞர் அண்ணா. ‘வீட்டுக்கு வீடு என்ன, வீட்டையே நூலகமாக மாற்றி விட்டேன்’ எனப் பெருமிதம் பொங்கச் சொல்கிறார் திவான்.
பாளையங்கோட்டையில் வ.உ.சி மைதானத்துக்கு எதிரே குறுகலான வீதியில் அமைந்துள்ளது திவானின் வீடு. புத்தகங்களுக்கு மத்தியில் வாழ்பவர் என்று கூறுவது கூட பொருத்தமாக இருக்காது. புத்தகங்களுக்கு தாரளமாக இடம் ஒதுக்கிவிட்டு இவர் ஓரமாக வசித்து வருகிறார் எனலாம். மேல் மாடி வீட்டை முழுவதும் புத்தகங்களுக்கே வாடகைக்கு விட்டிருக்கிறார். ஒவ்வொரு அறையிலும் இரும்பு அலமாரிகள், பீரோக்களில் புத்தகங்களை நிறைத்து வைத்திருக்கிறார். தரைத்தளத்திலும் ஒவ்வொரு அறையையும் புத்தகங்கள் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன. திவான் வீட்டில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை ஒரு லட்சம்.
இலக்கியம், வரலாறு, ஆன்மீகம், சினிமா, இசை, மருத்துவம், சுய முன்னேற்றம் என சகல துறைகளிலும் புத்தகங்கள் திவான் வசம் இருக்கிறது. கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்களும் உள்ளன. 1955-களில் அண்ணாதுரை, கருணாநிதி, இரா.நெடுஞ்செழியன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு, கண்ணதாசன் ஆகியோர் தாங்கள் எழுதி நடத்திவந்த பொக்கிஷ இதழ்களை சேகரித்து வைத்திருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு நாவல் ஆசிரியர், எழுத்தாளர் என்ற முகங்களும் உண்டு என்று கூறும் திவான், ஜெயலலிதா எழுதிய ‘எண்ணங்கள் சில’, ‘நீ இன்றி நான் இல்லை’, ‘நெஞ்சிலே ஒரு கனல்’, ‘உறவின் கைதிகள்’, ‘மனதைத் தொட்ட மலர்கள்’ ஆகிய ஆச்சரியமான நூல்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். ஒவ்வொரு அலமாரியிலும் துறைகள், எழுத்தாளர்கள், ஆண்டுகள் வாரியாக நூல்களை நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்கிறார். புத்தகத்தின் தலைப்பை கூறினால் ஒரு நிமிடத்தில் தேடி எடுத்துவிடுகிறார்.
‘’சொந்த ஊர் செங்கோட்டை. பியுசி முடிச்சிட்டு, ரெண்டு வருஷம் படிக்கப் போகல. அந்தக் காலகட்டத்துல செங்கோட்டையில ரயில்வே ஊழியர்களுக்கான நூலகத்தில் புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன். அதுல இருந்து புத்தகங்கள் சேகரிக்க ஆரம்பிச்சதுதான். தினமும் ரெண்டு புத்தகங்கள் வாசித்து விடுவேன். இத்த புத்தகங்கள் எல்லாம் 45 வருஷமா சேகரிச்சு வைச்சது. ஏற்கெனவே புத்தகங்களை வைக்க இடமில்லாம மூணு குட்டி யானை வண்டி நிறைய புத்தகங்களை கடையநல்லூர் அரசு பள்ளிக்கு கொடுத்துட்டேன்.
‘சாகும் வரை கல்வி கற்க வேண்டும்’ என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப இன்னைக்கும் தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன். வரலாற்று ஆய்வுகள் மீது எனக்கு ஈடுபாடு வந்தது. எம்.ஏ., எம்.ஃபில், பி.ஹெச்டி எல்லா வகுப்பிலும் வரலாற்றையே எடுத்தேன்’’ என்று கூறும் திவான் ஒரு படைப்பாளியும் கூட. வரலாற்றியல் ஆய்வுகள் தொடர்பாக இதுவரை 110 நூல்கள் எழுதியுள்ளார். இன்னும் சில நூல்கள் எழுதிவருகிறார்.
விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம்பிள்ளை, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் ஆகியோர் எழுதிவைத்த உயில் சாசன நிருபத்தை தேடி எடுத்து முதலாவதாக பதிப்பித்து இருக்கிறார். மதிமுகவின் தொண்டராக இருக்கும் திவான், வைகோவை பற்றி 15 நூல்கள் எழுதியுள்ளார். ‘பரிசு பெறாத பாரதி பாடல்’ எனும் நூலில், தமிழ் மக்கள் அனைவரும் நன்கறிந்த, ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ பாடல், பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு பாடல் போட்டியில் பரிசு பெறத் தவறி விட்டது என்ற அரிய தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார் திவான்.
‘’வரலாறு வரைவது என்பது ஒரு புது வீட்டினைக் கட்டு எழுப்புதல் போன்றது. வீடு கட்டுவதற்குத் தேவையான சான்றுகள் இல்லாமல் வீடு கட்டினால் அவ்வீடு நீண்ட காலம் நிலைக்காது. சக்கரவர்த்தியின் அரண்மனையானாலும் சாதாரணமானவரின் குடிசையானாலும் அஸ்திவாரமில்லாமல் அமைக்க முடியாது. இந்த அஸ்திவாரத்தை சிறக்க அமைக்க உதவுவது வரலாற்றுச் சான்றுகள்.
என்னைவிட வசதியானவர்கள் ஊரில் இருக்கலாம். ஆனால் அறிவாளி யாரும் இருக்கக்கூடாது என்பதை மனதில்கொண்டு புத்தகம் வாசித்தேன். இன்று புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து, டிஜிட்டலில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தகமாக வாசிக்கும்போது இருக்கும் இருக்கும் வாசிப்பு ஈடுபாடு, நினைவில் நிற்கும் வரிகள் டிஜிட்டலில் வாசிக்கும்போது இருக்காது. புத்தக வாசிப்பு என்பது ஒரு கலை. அதுதான் மனிதனை பூரணப்படுத்தும்’’ என்கிறார் திவான்.
தொடர்ந்து, ‘’என் மனைவி திவானி ஜஹானரா அரசு சித்த மருத்துவராக உள்ளார். என்னுடைய படைப்புலக பயணத்திற்கு ஊக்கமும், உறுதுணையும் தந்துக் கொண்டிருப்பவர். எங்களுடைய திருமணத்தை நடத்தி வைத்ததே மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிதான்.
வீடுதோறும் நூலகம் அவசியமான ஒன்று. அதுதான் அந்தக் குடும்பத்தின் சொத்து. குறைந்தது நூறு புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை ஆவது உருவாக்குங்கள். எனது வீட்டின் மேல்மாடியை மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடலாம். ஆனால் எனக்கு அது திருப்தியல்ல. புத்தகங்களுடன் வாழ்ந்து மகிழ்வதே எனக்கு பெரிய மனத்திருப்தி’’ அறிவொளி பிரகாசிக்கப் பேசுகிறார் திவான்.
18 வயதில் தொடங்கிய திவானின் புத்தக வாசிப்பு, நேசிப்பு, எழுத்துப் பணிகள் இன்னும் அடுத்த வயதைக்கூட எட்டாமல் அதே இளமையுடன் இருக்கிறது என்றால் மிகையன்று.
இதையும் படிக்க: கேன்சரை விரட்டிய காதல்