“இந்த சமூகம் அன்பு, கடின உழைப்பு, அக அழகு என்று பக்கம் பக்கமாக பேசினாலும், பல நேரங்களில் புறத்தோற்றங்களை வைத்தே ஒருவரை விமர்சனம் செய்கிறது. வேலைக்கான நேர்காணலில் கூட புறத்தோற்றதிற்கு பிறகே ஒருவரது திறமை, அறிவு,கல்வி பரிசீலிக்கப்படுகிறது” என்கிறார் மனக்குமுறலுடன் லட்சுமி அகர்வால். இதைச் சொல்லும் 28 வயது டெல்லி பெண்ணான லட்சுமி, காதலை மறுத்த காரணத்திற்காக ஆசிட் வீச்சுக்கு உள்ளானவர். அப்போது அவருக்கு வயது 15 தான்.
ஆணாதிக்க சமூகம், அதுவும் பெண்களே, லட்சுமியையும் அவரது குடும்பத்தையும் இழிவாக விமர்சித்தது. அவர்கள் லட்சுமியின் வளர்ப்பு சரி இல்லை, அதுவே இந்நிலைக்கு காரணம் என்று லட்சுமியின் மீதே பழியும் சுமத்தியது. ஆனால், லட்சுமியின் குடும்பம் அவருக்கு பக்கபலமாக இருந்தது. லட்சுமி குணமடைய தேவையான அறுவை சிகிச்சைகள் செய்தனர். தனக்கு நிகழ்ந்ததை லட்சுமி நன்கு உணர்ந்திருந்த போதும், தனது முகத்தை ஏற்றுக் கொள்ளும் தைரியம் அவருக்கு இல்லை. உடலளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தார். இது அவரை தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டியது. ஆனால், தனது பெற்றோர்களுக்காக வாழ துணிந்தார்.
லட்சுமிக்கு தேவையான கவுன்சலிங்க் ஏற்பாடு செய்து கொடுத்து அவரை அரவணைத்துத்தனர். லட்சுமிக்கு ஏழு அறுவை சிகிச்சைகள் நிகழ்ந்தது. குடும்பத்தினர், நண்பர்களின் ஆதரவு சுமார் 20 லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் செலவை சமாளிக்க துணை நின்றது. அதே நேரத்தில் லட்சுமி நீதி வேண்டி நீதிமன்ற படியேறினார். நீதிமன்றம் ஆசீட் வீச்சிய இருவருக்கு 10 மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
ஆசிட் தாக்குதல் லட்சுமியை முடக்கிப் போடுவதற்கு பதிலாக, அவரை பெண் போராளியாக அவதாரம் எடுக்க வைத்தது. லட்சுமி தன்னை போன்று பாதிக்கப்பட்டவர்களின் முன்னேற்றதிற்க்காக உதவி வருகிறார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தீபிகா படுகோண் நடிப்பில் உருவாக்கப்பட்ட ‘சப்பாக்’ திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) வெளியாகிறது.
“எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. அதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தேன். பின்பு ஒரு இரண்டரை மாததிற்கு என் முகத்தை தொடவோ, கண்ணாடியில் பார்க்கவோ எனக்கு தைரியம் இல்லை.
இந்த சமூகம் கொடூரமானது. அது இயல்பான தோற்றத்தையே கடுமையாக விமர்சிக்கும் இயல்புடையது, அதிலும் நான் எம்மாத்திரம்? நான் பாதிக்கப்பட்டவள், அதில் எனது தவறு ஏதுமில்லை. அதற்காக நான் வெட்கப்படவோ, பலியாகவோ விரும்பவில்லை. என் குடும்பத்திற்காக வாழ முடிவு எடுத்தேன். என்னைப் போன்று அசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக வாழ முடிவு செய்தேன்” என்று கூறும் லட்சுமி, உலகளவில் தைரியமான பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச விருதினை 2014-இல் அப்போதைய அமெரிக்க அதிபரின் மனைவி மிசெல் ஒபாமாவிடமிருந்து பெற்றார்.
தன்னம்பிக்கை எனும் ஒளி
தனக்கு நேர்ந்த அநீதிக்கு பலியாக விரும்பாத லட்சுமி அகர்வால், தனது பெற்றோரின் ஆதரவுடன் டெல்லியில் தொழிற்கல்வி பயின்றார்.
“ஓரு நாள் கண்ணாடியில் என் முகத்தை பார்த்து கொண்டு இருக்கும் போது, முகத்தை வெளிக்காட்ட தைரியம் இல்லாத நான், எப்படி தொழில் செய்வது? எதற்காக தொழிற்கல்வி கற்க வேண்டும்? இனி துணியை கொண்டு முகத்தை மறைக்கப் போவது இல்லை” என்ற தனது முடிவை நினைவு கூர்கிறார்.
லட்சுமியின் இந்த முடிவு, சமூகமும் ஏன் அவருடன் படிக்கும் சக மாணவிகளிடமிருந்தும் எதிப்புகளை உருவாக்கியது. தன் முடிவில் உறுதியாக இருந்த லட்சுமிக்கு, ஆசிரியர்களும், கல்வி நிறுவனமும் உறுதுணையாக நிற்கவே தொழிற்கல்வியில் தேர்ச்சி பெற்றார்.
கலங்கரை விளக்கம்
லட்சுமி அகர்வால், 2013 ஆம் ஆண்டு, அலோக் தீக்சித் என்ற சமூக செயற்பாட்டாளர் நடத்திய, ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ எனும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இதுவே ச்ஹான்வ் என்ற பெயரில் அறக்கட்டளையை உருவாக்க காரணமாக இருந்தது. இந்த அறக்கட்டளை, ஆசிட் வீச்சால் பாதிப்புக்கு உள்ளாகியவர்களின் எதிரொலியாக இருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகள், சட்ட ஆலோசணைகள் மற்றும் அவர்கள் மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகளை செய்கின்றது.
தனது அறக்கட்டளை மூலமாக ஒரு பெண்ணின் எண்ணங்களையும், உரிமைகளையும் இந்த சமுதாயம் மதிக்க வேண்டியதின் அவசியத்தையும், ஆசிட் வீச்சால் எற்படும் இன்னல்களையும் நாடு முழுவதும் மக்களிடம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார். தனது அறக்கட்டளை மூலமாக, தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உரிய சிகிட்சைகளை முதலில் எடுத்துரைக்கிறார். பொதுமக்களை சிகிச்சைக்குத் தேவையான தோல் தானம் செய்யவும் ஊக்குவிக்கிறார்.
“என்னைப் போல பாதிக்கப்பட்ட பலரை சந்திக்கும் போது, என்னுடய சீற்றம் இன்னும் அதிகமாகியது. அவர்களில் பலர் பெற்றோர் ஆதரவு கூட இல்லாமல் இருந்தனர். தங்கள் தேவைகளை சமாளிக்க, ஒரு வேலை மட்டுமே இவர்கள் தேவையாக இருந்தது. இந்த சமூகம், ஆசிட் வீசியவர்களை விடுத்து, பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி வெறுத்து ஒதுக்குகிறது. இதை சரி செய்ய வேண்டும்” என்கிறார் லக்ஷ்மி.
நிர்பயா வன்முறைக்கு பிறகு பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து மக்களின் குறல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. லட்சுமியின் வேகத்தை இது அதிகரித்தது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு, ஆக்ரா செல்லும் வழியில் ஃபடேபட் என்னும் இடத்தில், ஷீரோஷ் என்ற பெயரில் கஃபே நடத்தி வருகிறார்.
“ஆசிட் வீச்சால் பாதிக்கபட்டவர்களுக்கு, வேலை என்பது நம்பிக்கை தருவது மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்திற்கும் ஒரு ஆறுதலாய் அமைகிறது. மேலும் இந்த சமுதாயத்திற்கும் எங்களுக்கும் ஒரு பாலமாய் அமைகிறது.” என்று மனம் திறக்கிறார் லட்சுமி..
சட்டப் போராட்டம்
லட்சுமி அகர்வால் தக்கல் செய்த ரிட் மனுவின் பலனாக, ஆசிட் விற்பனை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை, அரசு உதவி, கல்வி கற்க முன்னுரிமை, மறுவாழ்வு குறித்து, திருத்தங்கள் செய்து, வெளியிட்டது உச்ச நீதிமன்றம். அதன்படி மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் ஆசிட் வீச்சால் பாதிக்கபட்டவர்களை அரவணைத்துக் கொள்கிறது.
ஆசிட் தாக்குதலை தடுப்பதற்கும், சட்ட விரோத ஆசிட் விற்பனையை தடுப்பதற்கும் பொதுமக்களில் 27,000 பேரிடம் கையெழுத்தினைப் பெற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அக்கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் ஆசிட் விற்பனையை கண்காணிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
சர்வதேச அளவில் வங்கதேசம், இந்தியா, கம்போடியா நாடுகளில்தான் ஆசிட் வீச்சு தாக்குதல்கள் அதிகம் நடக்கிறது. இங்கெல்லாம் ஆசிட் விலை மலிவாக எளிதில் கிடைக்கப் பெறுகிறது. 2002 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை எடுத்த ஒரு கணக்கெடுப்பில், 88% ஆண்கள் ஆசிட் தாக்குதலையே ஆயுதமாக எடுக்கின்றனர் என்றும் அதனால் 72 சதவிகிதம் பெண்களே பாதிக்கப்படுகின்றனர் என்ற அபாயத்தை உறுதி செய்கிறது. ஆனால் லட்சுமி அகர்வால் போன்றவர்களின் முயற்சியால் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கான நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
“ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டவே நான் பயணிக்கிறேன். நான் கூற விரும்புவதெல்லாம், பெணகள் ஒற்றுமையாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க, இனிவரும் தலைமுறைகளுக்கு, பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் மதிக்க கற்றுக் கொடுப்போம்’’ என்கிறார் அவர்.
சமூக செயற்பாட்டாளரான அலோக் தீக்சித் என்பவரை காதல் மணம் புரிந்தார் லட்சுமி. தற்போது அவர்களுக்கு பிகு என்றொரு மகள் இருக்கிறாள்.