‘தனுஷ் கடின உழைப்பாளி; வெற்றிமாறன் நல்ல படைப்பாளி’ – டாப்ஸி

446
‘தனுஷ் கடின உழைப்பாளி; வெற்றிமாறன் நல்ல படைப்பாளி’ – டாப்ஸி

வெள்ளாவியில் வெளுத்த தேவதையாக இன்றும் மிளிர்கிறார் டாப்ஸி பன்னு. ‘ஆடுகளம்’ படம் மூலமாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமா களத்தை தன்வசப்படுத்தியவர், இப்போது பாலிவுட்டில் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தற்போது ஜெயம்ரவியுடன் ஒரு படத்தில் நடித்து வரும் டாப்சி தனது கரியர் குறித்து மனம் திறந்து பேசியதிலிருந்து…

எஞ்சினியரிங் டூ சினிமாத்துறை எப்படி?

நான் என்னோட படிப்பு விஷயத்துல ஒருபோதும் சமரசம் செய்ய ரெடியா இருந்தது கிடையாது. நல்லா படிச்சதுனால கேம்பஸ் இன்டர்வியூவுல நல்ல வேலையும் கிடைசது. அதனாலதான் சினி ஃபீல்டுல எனக்கு இருந்த விருப்பத்துக்கு அவங்க ஆட்சேபனை எதுவும் சொல்லல. நான் ஒரு லக்கி கேர்ள். சினிமா வாய்ப்பு ரொம்ப ஈஸியா கிடைச்சுது எனக்கு.

தமிழ் சினிமாவுல இருந்துதான் உங்களோட நடிப்புப் பயணத்த ஆரம்பிச்சிங்க. முதல் படமான ‘ஆடுகளம்’ அனுபவத்தை சொல்லுங்களேன்?

‘ஆடுகளம்’ படத்துல மட்டும் நடிக்காம போயிருந்தேன்னா என்னால சினிமாவுக்கு இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா என்கிறது சந்தேகமே. படத்துல நடிச்சது மாதிரி எண்ணத்தையே, அந்த டீம் ஏற்படுத்தல. அவ்வளவு ஜாலியா நடிச்சு கொடுத்தேன். படம் பார்த்த பிறகுதான், அது எவ்வளவு அருமையான படம் என்கிறது தெரிஞ்சது. அந்த படத்துக்கு ஆறு தேசிய விருதுகள் கிடைச்சுது. உண்மையிலேயே தனுஷ் சார் கடினமான உழைப்பாளி; வெற்றிமாறன் சார் மிகச்சிறந்த படைப்பாளி. ஆடுகளம் படத்தோட வெற்றிக்கு முழுக்க அவங்கதான் காரணம்.
சினிமாவுல என்னோட போராட்டம் எப்போ துவங்குச்சுன்னா, ‘ஆடுகளம்’ படத்துல நான் வாங்கின பெயரை மத்த படங்களிலும் காப்பாத்தணும் என்கிறதுலேயே இருந்துச்சு. உண்மையிலேயே, அது ரொம்ப கஷ்டமான போராட்டம்தான்.

‘ஆடுகளம்’ படத்துக்கு பிறகு, நான் நடிக்கிற படத்துல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரியான படங்கள்ல நடிக்கணும்னு முடிவு பண்ணேன். அதன்படியே இப்போ படங்கள தேர்வு பண்றேன். கடவுளோட ஆசியால், நான் நினைச்சபடியே படங்கள் தேடிவருது.

‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகு உங்களை எந்த மாதிரியான படங்கள் தேடிவந்தன?

தமிழ் ரசிகர்கள், என்னை தமிழ்நாட்டு பெண் கேரக்டர்ல நடிக்கிறதயே விரும்புறாங்க. ஆனால், அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. ‘ஆடுகளம்’ படத்துல நான் ஆங்கிலோ இந்தியன் பெண் கேரக்டர்ல நடிச்சேன். அதுக்கப்புறம் ரசிகர்கள் என்னை லோக்கல் பெண்ணாக ஏற்க அவங்க விரும்பல. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏத்தமாதிரியான நடிப்ப என்னால ஒரே நைட்ல புரிஞ்சிக்க முடியல.

‘ஆடுகளம்’ படத்துல நடிச்சிட்டு இருக்கும்போதே நான் ‘ஜூம்மாண்டி நாடம்’ என்கிற தெலுங்கு படத்திலும் நடிச்சிட்டு இருந்தேன். அறிமுக காலத்திலேயே ஒரே நேரத்துல தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சு ரெண்டு படங்களும் சூப்பர் ஹிட். அந்த அரிய சாதனைகளை செய்த நடிகைகள் பட்டியலில், நானும் இருக்கிறேன் என்கிறது ரொம்ப ஹேப்பி.

சினிமா தவிர்த்து, மற்ற விஷயங்களிலும் ஈடுபட்டு வர்றீங்களே?

நானும் என்னோட சிஸ்டரும் சேர்ந்து திருமண நிகழ்ச்சிக்கான திட்டங்களை வகுத்துத்தரும் நிறுவனத்தை நடத்தி வர்றோம். அதுமட்டுமிமல்லாம, புனே பேட்மிடன் டீமோட ஓனராவும் இருக்கிறேன். சினிமா துறையை தாண்டி மற்ற துறையிலும் ஏதாவது சாதிக்கணும் என்கிறது என் ஆசை. என் முழு உழைப்பையும், நேரத்தையும் சினிமாவிலேயே வீண்டிக்க நான் விரும்பல.

டைரக்டர் டாப்ஸி… ப்ரோடிசர் டாப்ஸி’னு உங்கள சீக்கிரம் பார்க்கலாமா?

ஒரு படத்தை டைரக்ட் பண்றது ஈஸியான வேலை கிடையாது. அந்த வேலைக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன். படத்தை தயாரிக்கிற அளவுக்கு நான் இன்னும் வளரலன்னே சொல்லுவேன். என்னால ஒரேநேரத்துல ரெண்டு வேலைகளை செய்ய முடியாது. எது எனக்கு சரிப்பட்டு வருதோ, அந்த வேலையில தான் முழு ஈடுபாட்டோட ஒர்க் பண்ண முடியும். இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான் என்னோட கவனம். வேறெந்த ஐடியாவும் இல்ல.
ரசிகர்கள் உங்ககிட்ட எந்தமாதிரியான நடிப்பை எதிர்பார்க்கிறாங்க?

நான் நடிப்பு விஷயத்தில் முழு ஈடுபாட்டை செலுத்தி வர்றேன். ஆனாலும் என்னோட படங்கள் மேல ரசிகர்களுக்கு பெரிய அளவுல எதிர்பார்ப்பு இல்லை என்கிற விஷயம் ஒருவிதத்துல கவலைய தருது. ரசிகர்கள் அவங்க பணம், நேரத்த செலவழிச்சு என் படத்தை பார்க்க வர்றாங்க. அவர்கள ஒருபோதும் நான் ஏமாத்த மாட்டேன்…
நான் தேர்வு செய்ற படங்கள், என்னோட இமேஜை உயர்த்துற வகையில இல்லாம, என்னோட பெர்சனாலிட்டியை உயர்த்திக்கொள்ற மாதிரி பார்த்துப்பேன்.

நான் மத்தவங்க சொல்றத கேட்டாலும், இறுதி முடிவு எடுப்பவள் நான் தான் என்கிற கொள்கை கொண்டவள். நான் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருக்கவே விரும்புவேன். கொஞ்சநேரம் கூட சும்மா இருக்கமாட்டேன். என்னுடைய எல்லா முடிவுகளும் தீர ஆலோசித்து எடுக்கப்பட்டவையாகவே இருக்கும்.

நடிகை என்றபோதிலும் இயல்பான வாழ்க்கையையே வாழ விரும்புகிறீர்களே?

ஆம், நிச்சயமாக. நான் சாதாரண, இயல்பான வாழ்க்கையையே வாழ விரும்புபவள். நான் தனியாக பாடிகார்ட்ஸ் வைத்துக்கொள்ளவில்லை, மக்களிடையே எவ்வித ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். டில்லியில் இருக்கும்போது மெட்ரோவில் தான் பயணம் செய்வேன். ரசிகர்களிடையே, திரை பிரபலங்களுக்கு தனி ஈர்ப்பு இருந்தாலும், அவர்களும் நினைச்சா மத்தவங்கள போல இயல்பான வாழ்க்கை வாழலாம், அது ஒன்றும் பெரிய விஷயமில்ல.

எந்தமாதிரியான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

எக்ஸ்-மென், அவென்ஜர்ஸ் படங்கள்ல ஒரு கேரக்டரிலாவது நடிக்க ஆசை.

ஃபிட்னெஸ் சீக்ரெட்?

எனக்கும் ஜிம்முக்கும் ரொம்ப தூரம். ஸ்குவாஷ் விளையாட்டை விளையாடுறது மூலமா என்னோட உடம்ப கட்டுக்கோப்பாக வைச்சிருக்கேன். மற்றபடி, பிட்னெஸ் ரகசியம் என்று ஏதுமில்லை.

உங்களைப் பற்றி வரும் ட்ரோல்ஸ் குறித்து?

ட்ரோல்ஸ்களை நான் பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்வதில்லை. என்னைப்பற்றி சோசியல் மீடியாவில வரும் ட்ரோல்ஸ் எனக்கு சிரிப்பதான் வரவழைக்கும். என்னைப்பற்றி அதிகமாக ட்ரோல்ஸ் வரவர, நான் மென்மேலும் வளர்வதாகவே எடுத்ததுக்குவேன்.

பெண்ணியம் குறித்து?

பெண்ணியம் என்பது என்னைப் பொறுத்தவரை சம உரிமை தான். நான் பெண் என்பதால் எந்த விஷயத்திலும் சமரசம் செய்துகொள்வதிலோ , தரக்குறைவாகவாகவோ இருக்க விரும்பியதில்லை. ஒதுக்கீடு என்பது சூழ்நிலைகளை பொறுத்து அமைய வேண்டுமே தவிர, பாலின வேறுபாடுகளை பொறுத்து அமையக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில்?

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்லா தூங்குவேன். தினமும் 10 மணிநேரம் தூங்குவேன். 2 நாட்கள் ஓய்வு கிடைத்தால், உடனடியாக ஊர் சுற்ற கிளம்பிடுவேன்.

திருமணம்?

நான் நிச்சயம் சினிமா துறையை சேர்ந்தவரை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன். நான் வீட்டுக்கு வந்துவிட்டால் சாதாரண பெண்ணாகவே இருக்க விரும்புவேன், வீட்டுக்குள்ள என்னோட வேலையை கொண்டுவரமாட்டேன், காட்ட மாட்டேன். இயல்பாக இருப்பேன். எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால், அதை உங்களுக்கு எல்லாம் நிச்சயம் அறிவிப்பேன், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here