அழகிய பொன்மகள் இவள்..

389
அழகிய பொன்மகள் இவள்..

”ஹீரோயின்கள் கேரக்டரை மரியாதையாக சித்தரியுங்கள்; ஹீரோக்கள் பின்னால் சுற்றி சுற்றி வந்து காதலிக்கிற மாதிரி காட்டாதீர்கள். ஹீரோயின்களுக்கு குறைந்த ஆடையும், மோசமான அறிமுகமும் கொடுக்காதீர்கள். உங்கள் தாயார், சகோதரிகள், மனைவி, தோழிகள் ஆகியோரை பார்த்து அது போன்ற கேரக்டர்களை உருவாக்குங்கள்…’’ பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் பட இயக்குனர்கள் மீது ஜோதிகா கடிந்து பேசிய வார்த்தைகள் தான் இவை. இதைச் சொல்வதற்கு அவருக்கு முழுத் தகுதியும் இருந்தது.

தமிழ் சினிமாவில் ஜோதிகா அறிமுகமான காலத்தில் அப்போதைய போட்டி நடிகைகளான சங்கவி, ரம்பா, மும்தாஜ், கிரண், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வந்தனர். ஆனால் ஜோதிகாவோ அந்த பாதையை தெரிவு செய்யவில்லை. அடிப்படையில் உளவியல் பட்டப்படிப்பு பயின்றவரான ஜோதிகா, கவர்ச்சியை மட்டும் நம்பி நடிகைகள் சினிமாவில் நீடிக்க முடியாது என்கிற யதார்த்தத்தை புரிந்து வைத்திருந்தார்.

தனக்கு க்ளாமர் செட் ஆகாது என்றும் ஹோம்லி கேரக்டர் உள்ள கதை மட்டும் போதும் என தனக்கான நடிப்புப் பாணியை வரையறுத்துக் கொண்டார். இதன்காரணமாக பல பட வாய்ப்புகள் ஜோதிகாவை விட்டு விலகிப் போனாலும், திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து சீரான வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டார். மேலும் ஜோதிகாவின் அந்த நடிப்பு வரையறைதான் திருமணத்திற்கு பின்னதான இரண்டாவது இன்னிங்ஸில் அடித்து ஆடவும் கைக்கொடுத்தது.

ஆம், ஜோதிகாவின் வெற்றிக் கதையை தொகுக்க வேண்டுமெனில் திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என இரண்டு இன்னிங்ஸ்களாக பிரித்தெழுவது அவசியமாகிறது. காரணம் அவரது வளர்ச்சி படிநிலைகள் அப்படி. திருமணத்திற்கு முன் நடிப்பில், பேசும் மெழுகு பொம்மையாக வலம்வந்த ஜோதிகா, இரண்டாம் இன்னிங்ஸில் நடிப்பில் ராட்சசியாகியாக உருமாறினார்.

1998-ல் ‘டோலி சாஜாகே ரக்னா’ என்ற இந்திப் படம் வழியாக திரையுலகில் காலூன்றிய ஜோதிகா, அதன்பின் பாலிவுட் பக்கம் போகவேயில்லை. அஜித்தின் ‘வாலி’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவருக்கு, முதல் படமே மெகா ஹிட் படமாக அமைந்தது.

‘வாலி’ படத்தில் சிம்ரனை காதலிக்கும் அஜித், அனுதாபத்தை உருவாக்குவதற்காக தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், காதல் தோல்வியடைந்ததாகவும் பொய் சொல்வார். அந்தக் கற்பனைக் காதலியாக நடித்தவர் தான் ஜோதிகா. ஒரு சின்ன ரோல் தான் இது. ஆனாலும் அக்காட்சி இடம்பெற்ற ‘ஓ சோனா…’ என்ற அந்த பாடலை கொண்டாடித் தீர்த்தனர் இளவட்ட ரசிகர்கள். இப்படத்துக்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை தட்டிச்சென்றார் ஜோதிகா. பின்னர் அதே ஆண்டில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் சூர்யாவுடன் சிங்கிள் ஹீரோயினாக நடிக்கவே, ஜோ காட்டில் அடைமழை தொடங்கியது.

1999, 2000-களில் வேகமாக வளர்ந்துவந்த நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன், பிரசாந்த் ஆகியோரின் படங்களுக்கு ஜோதிகாதான் முதல் சாய்ஸ். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்ததும் ஜோதிகாவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ஜோதிகாவுக்கு, வருடத்தில் நான்கைந்து படங்களாவது வெளியாகவே, அவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர் பெரிய இயக்குனர்கள். அவர் நடிப்பில் சக்கைபோடு போட்ட குஷி, காக்க காக்க, பேரழகன், சந்திரமுகி, மொழி உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பல விருதுகள் ஜோவை தேடி வந்தன.

ரஜினிகாந்தின் திரைப் பயணத்தில் பெரிய வெற்றி படங்களில் ஒன்று ‘சந்திரமுகி’. ரஜினிக்கு நிகராக அந்த படத்தில் அமைந்திருந்தது ஜோதிகாவின் சந்திரமுகி கதாபாத்திரம்தான். தனது மிரட்டலான நடிப்பால் ரஜினியை ‘ஓவர்டேக்’ செய்து தமிழ் திரையுலகில் புகழின் உச்சிக்கே போனார் ஜோதிகா. ‘ராரா சரசக்கு ராரா’ என கண்களை உருட்டி மிரட்டி ஆடும் அந்த நடனத்தை இன்றும் ரசிப்பவர்கள் உண்டு.

“என்னிடம் அவரது நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தியேட்டரில் படம் முடிந்தபோது ஏற்பட்ட பிரமிப்பில் இருந்து நான் விடுபடவே வெகு நேரமாயிற்று. அந்த அளவுக்கு சந்திரமுகியாக வாழ்ந்திருந்தார் ஜோதிகா’’ என படம் வெளியானபோது புகழ்ந்து மெச்சினார் நடிகை சிம்ரன். அவர் சந்திரமுகியை அந்தளவு ரசித்துக் கொண்டாடியதற்கு ஒரு காரணமுண்டு.

‘சந்திரமுகி’ படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சிம்ரன் தான். ஒரு வாரம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில், தான் கருவுற்றிருப்பதை அறிந்து இயக்குனர் பி.வாசுவிடம் தனது உடல்நிலையை விளக்கினார். படத்தை முடித்துக் கொடுப்பதில் தனக்கு பிரச்சனையில்லை எனவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் படத்தில் `ராரா’ பாட்டில் சந்திரமுகி குதித்துக் குதித்து சுழன்றாடியபடி நடனமாட வேண்டும். இதை சிம்ரனிடம் சொல்லி ‘சந்திரமுகியா? குழந்தையா?’ என்ற முடிவை அவரிடமே விட்டார் வாசு. சிம்ரனின் தாய்மையுணர்வு வென்றது. அதனால் அவர் படத்திலிருந்து விலகிக்கொள்ள, அதன்பின்னரே ‘சந்திரமுகி’ கேரக்டருக்கு ஜோதிகா ஒப்பந்தமானார். ’சந்திரமுகி’ படப்பிடிப்பின்போது, ‘’இது எனது படம் அல்ல. படத்தின் தலைப்பு ‘சந்திரமுகி’. அதனால் இது உங்கள் படம்” என ரஜினிகாந்த் தன்னை உற்சாகப்படுத்தியதாக நிகழ்ச்சி ஒன்றில் மனம்திறந்து பேசினார் ஜோதிகா.

கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் சமீப ஆண்டுகளாகத் தான் பேசப்படுகிறது. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பே ‘சிநேகதியே’ படம் மூலமாக விதை போட்டார் ஜோதிகா. இரண்டு கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான விட்டுக்கொடுக்காத நட்பை பேசும் படமாக மட்டுமின்றி, ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகவும் அமைந்ததால் இருபாலின ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது அப்படம். கதாநாயகர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த அந்நேரத்தில் ஒரு நாயகி இந்தளவு முக்கியத்துவம் பெற்றது அரிதான நிகழ்வு.
திரையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி கச்சிதமாக இருந்ததால் பூவெல்லாம் கேட்டுப்பார் தொடங்கி உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் R, சில்லுனு ஒரு காதல் என ஆறு படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்தனர். குறிப்பாக ‘காக்க காக்க’ படத்தில் நடித்தபோதுதான் இருவருக்குமிடையில் காதல் அரும்பியது.

சூரியா-ஜோதிகா காதலை ஜோதிகாவின் வீட்டில் ஏற்றுக்கொண்டாலும், சூர்யாவின் வீட்டில் ஏற்றுக்கொள்வதில் சில தயக்கங்கள் இருந்தன. சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு சினிமாத் துறையில் அல்லாத மருமகளே தனது விருப்பம். இதனால் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த சிவக்குமார், பின்னர் சூர்யாவின் விடாப்பிடியை கண்டு பச்சைக்கொடி காட்டினார். நாளடைவில் அவரது வாயிலிருந்தே, ‘நானே பார்த்திருந்தால்கூட சூர்யாவுக்கு இப்படியொரு பெண்ணை பார்த்திருக்க மாட்டேன்’ என நெகிழ்ந்து கூறியதுதான் அல்ட்டிமேட். திரையில் பொருத்தமான ஜோடியாக இருந்த சூர்யா-ஜோதிகா பின்னர் நிஜத்திலும் ஜோடியானது பலரது புருவங்களை உயர்த்தியது..

ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா நீண்டகாலம் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் 8 வருட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கினார் ஜோ. இம்முறை ஹீரோவை துரத்தித் துரத்தி காதலிக்கும் நடிகையாக அல்ல; மினுமினுக்கும் ஆடையில் டூயட் ஆடும் ஹீரோயினாக அல்ல; சம்பிரதாயத்துக்கு வந்துசெல்லும் நாயகியாக அல்ல. தனித்துவமான கதைக்களம் மற்றும் தனக்கான வலுவான கதாபாத்திரம் பொருந்திய படக்கதைகளை தெரிந்தெடுத்து நடித்தார் ஜோதிகா.

அப்படியொரு ஒரு மாஸான ரீ-என்ட்ரியை சூர்யா தயாரிக்க ’36 வயதினிலே’ படத்தின் மூலம் கொடுத்தார். நம் சமூக அமைப்பில் திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் அடையாளச் சிக்கலை தனது முதிர்ச்சியான நடிப்பால் பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டினார் ஜோதிகா. மேலும் வெகுஜன மக்களிடம் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வை இன்னும் பரவலாகக் கொண்டு சேர்த்தது ‘36 வயதினிலே’.

இதையடுத்து ஜோவுக்கான பட வாய்ப்புகள் மீண்டும் குவியத் துவங்கின. ஆனால் தனது கதைத் தேர்வுகளில் ஜோதிகா அதிக கவனம் செலுத்தினார். ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘ஜாக்பாட்’, ‘ராட்சசி’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்ததுடன், முழுப் படத்தையும் தூக்கி நிறுத்தும் தனி கதாநாயகிகள் வரிசையில் அழுத்தமாக கால்பதித்தார் ஜோ.

சமூக அக்கறை பேசும் படங்களோடு சுருக்கிக் கொள்ளமால் செக்கச்சிவந்த வானம், ஜாக்பாட், தம்பி போன்ற வெவ்வேறு வகையான ஜானர் படங்களிலும் தலைகாட்டி, தனது திரைப் பயணத்தை சமச்சீராக தொடர்கிறார். ஜோ.

ஒரு ஹீரோயினுக்கு ஃபேம்லி ஆடியன்ஸ் இருக்கிறது என்றால் அது ஜோவுக்குதான். 22 வருடங்களாக, இடையில் சில காலம் இடைவெளி எடுத்தக்கொண்டும் சினிமாவில் ஹீரோயினாகவே பயணிப்பது சாதாரண விஷயமல்ல. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, தன்னை நோக்கி வீசப்படும் விமர்சனக் கணைகளை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆக கடந்து போவதும்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here