நான் சிங்கர்னு யாருக்கும் தெரியாது – ராஷி கண்ணா துறுதுறு பேட்டி..

353
நான் சிங்கர்னு யாருக்கும் தெரியாது – ராஷி கண்ணா துறுதுறு பேட்டி..

வசீகரமான அழகும் துள்ளலான நடிப்பும் ராஷி கண்ணாவுக்கு பட வாய்ப்புகளை குவித்த வண்ணம் இருக்கின்றன. திரையில் தனக்கு அளித்த கதாபாத்திரத்தை எந்த சிரத்தையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக நடித்து அதற்கு உயிர் கொடுக்கிறார். நடிகரை மையமாக கொண்ட கமர்ஷியல் படங்களில் கூட தன் முத்திரையை பதிக்கிறார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தன் ரசிகர்களுக்கும் ஊடகத்திற்கும் மறைத்தே வைத்திருக்கும் இந்த நாயகியிடம் உரையாடும்போது ஒரு பெண்ணாகவும் ஒரு நடிகையாகவும் அவர் யார் என்று நாம் வைத்திருந்த பிம்பத்தை மறு யோசனை செய்கிறோம். அவரிடம் பேசியதிலிருந்து…

ஒரு நடிகையாக உங்கள் வாழ்க்கை எப்படி செல்கிறது?

என் வாழ்க்கையில் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கடந்த சில மாதங்கள் அற்புதமாகவும் நான் செய்யும் வேலைகள் மனநிறைவாகவும் இருக்குது. எல்லா படங்களும் ஹிட் ஆகும்ன்னு சொல்ல முடியாது. ஒரு படம் வெற்றி அடைய பல காரணங்கள் இருக்கும், இல்லையா? நீங்கள் செய்யும் வேலையில் உண்மையாக இருந்தால் மக்கள் நிச்சயம் கவனிப்பாங்க. பெர்சனலா யாரையும் குற்றம் சொல்லாதவளாக, மன்னிக்கும் குணமுடையவளாக மாறியுள்ளேன். இதை விட எனக்கு என்ன வேண்டும்?

‘சங்கத்தமிழன்’ படத்தில் விஜய் சேதுபதியோடு சேர்ந்து நடித்ததை பற்றி கொஞ்சம் கூறுங்கள்?

அவரைப் போன்ற நடிகர்களோடு நடிக்கும் போது நிறைய கற்றுக் கொள்ளலாம். முதல் நாள் ஷூட்டிங்கின் போது எனக்கு பயமா இருந்துச்சு. ஒரு சீன்ல அவர் யதார்த்தமாக பார்த்த போது, என் வசனத்தை கூட மறந்துட்டேன் (சிரிக்கிறார்). அவரது கண்களே பேசுகிறது. ஷூட்டிங்க் ஸ்பாட்டிலேயே தன்னோட பாடி லாங்குவேஜயும் டையலாக்குகளையும் மெருகேற்றி கொள்கிறார். சூட்டிங் ஸ்பாட்ல நாங்க ரெண்டு பேரும் நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம். உண்மையிலேயே விஜய் சேதுபதியோடு எஞ்சாய் பண்ணி நடிச்சேன்.

அடுத்த சில மாதங்களில் நீங்கள் நடித்த மூன்று தெலுங்கு படங்கள் வரிசையாக வெளியாக உள்ளது. படத்தின் முடிவுகளை கேட்க ஆவலாக உள்ளீர்களா?

நான் நடித்த படம் வெற்றியடையுமா தோல்வி அடையுமா என பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. அந்த ஓட்டத்தில் நானும் செல்ல விரும்புவேன், அவ்வுளவுதான். நான் ஆன்மிக நாட்டம் கொண்டவள் என்பது என் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும். ரிசல்டை காட்டிலும் ப்ராசஸ் தான் எனக்கு முக்கியம். நான் நடிக்கிற கேரக்டருக்கு நியாயம் செய்கிறேனா என்ற விஷயத்தில்தான் பயப்படுவேன். என்னுடைய வேலையை சிறப்பாக செய்துவிட்டு மற்றவற்றை ஆடியன்ஸ் முடிவுக்கு விட்டுவிடுவேன்.

கோலிவுட்டில் மக்கள் உங்களைப் பற்றி வித்தியாசமாக நினைக்கிறார்களா?

தெலுங்கில் என்னை எப்படி நினைக்கிறார்கள் என்றே எனக்கு இன்னும் தெரியல. அதனால தமிழ் ரசிகர்களை பற்றியும் தெரியவில்லை. சில நேரங்களில் நான் ஒரு நடிகை என்பதையும் மறந்து ரோட்ல நடந்து போவேன். என்னைப் பொருத்தவரை இது நல்ல விஷயம். ஏன்னா யாரும் என் மீது அடையாளம் குத்த மாட்டார்கள். நான் குறிப்பிட்ட வகையான சினிமாவிற்கு தான் நன்றாக இருப்பேன். ஸ்க்ரீன்ல என்னை மக்கள் பார்க்கும் போது, அது என்ன வகையான படம் என்பதை விட என்னை ஒரு நடிகையாக தான் பார்க்கிறாங்க. நாயகியாக என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள, நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ள கதைகளை தமிழில் எதிர்பார்க்கிறேன்.

ஷூட்டிங்கில் இல்லாத போது ராஷியின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

நடிகர்களின் வாழ்க்கை விசித்திரமானது, இல்லையா? சில சமயங்களில் நீங்க விரும்பியது கிடைக்காது. அது ஏன் என்றும் உங்களுக்கு பல நேரங்களில் தெரியாது. ஆனால் என்னிடம் மாறாத விஷயம், என் மீதான என்னுடைய நம்பிக்கை. எந்த வேலை செய்தாலும் அதில் என்னுடைய முழு அர்ப்பணிப்பை கொடுப்பேன். நான் எதற்கும் பயந்தவள் இல்லை. இதுவரை எனது பயணம் நன்றாகவே உள்ளது. இந்த நிலையிலிருந்து நான் ஏன் கீழிறங்க வேண்டும்?

தமிழ் படங்களில் உங்களுக்கு கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களே கொடுக்கப்படுகிறதே?

ஆடை அலங்காரத்தை நான் மிகவும் விரும்புவேன். ஆனால் எனக்கு நடிக்கவும் விருப்பம். முதலில் நான் தெலுங்கில் தான் நடிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகே தமிழிற்கு வந்தேன். ஆனால் நடிகைகளுக்கென்று நல்ல கேரக்டர்களை இயக்குனர்கள் எழுதுகிறார்களா என்ன, குறிப்பாக கமர்ஷியல் சினிமாவில்? நடிப்பதற்கு எங்களுக்கு இடம் அளிப்பார்களா என எனக்கு தெரியாது. அதனால் எனக்கு கிடைத்த ரோலில் நன்றாக நடிக்கிறேன். ஒரு ஃப்ரேமில் வெறுமனே நின்றுவிட்டுப் போவதை விரும்பவில்லை. எப்போதுமே இந்த மாதிரியான படங்கள் மட்டுமே பண்ணுவேன் என்று ஒரு வட்டத்துக்குள் இருந்துகொண்டு கதைகளைக் கேட்பதில்லை. எனக்கு க்ளாமர் கேர்ள், கமர்ஷியல் ஹீரோயின் போன்ற அடைமொழிகள் தேவையில்லை. அதுக்கும் மேல பெருசா ஏதாவது செய்யணும்; செய்வேன்.

நல்ல கேரக்டர்கள் கிடைக்க வேண்டுமென்று ஏதாவது திட்டம் வைச்சிருக்கீங்களா?

முழு நீள கதாபாத்திரம் கிடைத்தால் தான் மக்கள் என்னை கவனிக்க தொடங்குவார்கள். அது இன்னும் நடக்கவில்லை. இமைக்கா நொடிகள் மற்றும் அடங்க மறு படங்களில் என் நடிப்பை பார்த்த பிறகு, என்னாலும் நன்றாக நடிக்க முடியும் என்பதை இயக்குனர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரே மாதிரியான கேரக்டரில் நடிப்பது குறித்து எனக்கு பயமில்லை. கூடிய சீக்கிரத்தில் நல்லது நடக்கும்.

நீங்கள் ஒரு பாடகரும் கூட. தமிழில் நீங்கள் பாடுவதை நாங்கள் எப்போது கேட்கப் போகிறோம்?

நான் ஒரு நல்ல பாடகர் என யாருக்கும் இங்கு தெரியாது. அதை நான் கூறவும் இல்லை. தெலுங்கு படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்பில் நான் பாடுவதை பார்த்து எனக்கு வாய்ப்பளித்தார்கள். நீங்கள் ஏன் பின்னனி பாடகியாக முயற்சி செய்யக்கூடாது என இப்போது கேட்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here