கடையம் அருகே ஏ.பி.நாடானூரில் 4 ஏக்கரில் 4000 பனை விதைகளை தன்னார்வலர்கள் விதைத்துள்ளனர்.
அழிந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அழிக்கப்பட்டு வரும் தமிழர் அடையாளமும், தமிழக அரசின் மரமுமான பனை மரத்தை கொண்ட பனை மரச்சோலை உருவாக்க, ஏக்கருக்கு 1,000 பனை என்ற முறையில் கடையத்தின் அருகில் இருக்கும் அணைந்த பெருமாள் நாடானுரில் 4 ஏக்கரில் 4000 பனைவிதைகள் விதைக்கும் நிகழ்வு, பனையாண்மை – தற்சார்பு வாழ்வியல் மற்றும் வளம் கூட்டும் வளர்ச்சிக்கான நடுவம் சார்பில் பனை ஆய்வாளர் முனைவர் பாமோ மற்றும் ஆசிரியர் அந்தோனி ராஜ் அவர்களின் தலைமையில் தன்னார்வலர் குழுவால் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
வெள்ளை காச்சி, சிவப்பு காச்சி , கருப்பு காச்சி , யாழ்பான சட்டி பனை,குட்டை பனை என பல்வேறு வகையான 4000 பனை விதைகளைச் சேகரித்து இந்த பனை வகைகளை காக்கும் பெருக்கிடும் முயற்சியில் இந்த பனைமரச்சோலையை உருவாக்குகின்றனர்.
இந்நிகழ்வில் பேசிய பனை முனைவர் பாமோ, பனைமரம் பயன்மரம் . பனையோடு கூடி அதை பண்படுத்தி பயன்படுத்தி, பாதுகாத்து, அதிலிருந்து நமது தேவைகளை நிறைவு செய்து கொண்டு பனையோடு கூடிய தற்சார்பு வாழ்வியல் வாழ்ந்து வளம்குன்றா/வளம் கூட்டும் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதே பனையாண்மை எனப்படும்.
உயிர் பாதுகாப்பு உயிர் காற்று உயிர்நீர் உணவு உறைவிடம் என நமது அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து நமக்கு துணையாய் நிற்கும் பனை தெய்வத்துக்கு இணை. குளக்கரை, கடற்கரை மற்றும் சாலைகள் ஓரம், அரசு நிலங்களில் பனைவிதைகளை விதைப்பது எவ்வளவு பயனுள்ளதோ அதைப்போலவே ஒவ்வொரு உழவரும் தங்கள் நிலங்களின் வேலியோரம் மற்றும் பொருத்தமான உள் பகுதிகளிலும் வரிசையாக பனை மரங்களை நட்டு பனைமரச்சோலைகளை உருவாக்குவது மிக தேவையானதும் மிக பயனுள்ள சிறப்பான செயல்பாடாகும் எனறார்.
இதனால் பனை உயிர் வேலியாக செயல்பட்டு பெருங்காற்றிலிருந்தும் சுற்று சூழல் மாசுபாடுகளில் இருந்தும் தோட்டத்தில் உள்ள பயிர்களை காக்கும் . பனை படராமல் உயரமாக வளர்வதால் அதிக நிழல் தராததாலும் பயிர்களின் விளைச்சல் பாதிக்காது. பனையின் வேர்கள் நிலத்தடி நீரை சேகரித்து தோட்டதில் நல்லதொரு உயிர் சூழலை உருவாக்க உதவும். மேலும், பனம்பால் இறக்கும் போது தேனீக்களின் வருகை அதிகரிப்பதால் விளைச்சல் அதிகரிக்கும், அதனால் அனைத்து உழவர்களும் பனைமரச்சோலை உருவாக்கிட முன் வரவேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இந்த நிகழ்வில் பனை ஆர்வலர்கள் கிங்சிலி, பாபநாசம் அய்யா, ராமகுரு, பவித்ரன், பூபதி, ஜெயசத்தியா மாணவர்கள் கவின் ஜெப்வின் ஜெனி அலோசியசு ஆகியோர் கலந்து கொண்டனர். செங்கல் சூளை வீறகுககளாகி அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லபட்டு கொண்டிருக்கும் பனை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இவர்களின் பனையாண்மை- பனைமரச்சோலை ஒரு முன்னெடுப்பு பாராட்டத்தக்கது.